தாஜ்மகாலை காப்போம்!- முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து அந்த மாநில அரசு அண்மையில் நீக்கி விட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ.வான சங்கீத் சோம் நேற்று முன்தினம் தாஜ்மகால் பற்றி குறிப்பிடுகையில், ‘‘தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்கக் கூடாது. அது துரோகி களால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம்’’ என்று கூறி இருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மகால் பற்றி நேற்று அளித்த விளக்கத்தின் போது. ’பாரத மாதாவின் குழந்தை களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டப்பட்டது தாஜ்மகால். அதனை காப்பது மாநில அரசின் கடமை’ என யோகி ஆதித்யநாத் கூறினார்.

மேலும் அடுத்த வாரம் ஆக்ராவுக்கு செல்வேன். அப்போது சுற்றுலா திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். தாஜ் மகாலை யார் கட்டியது என்ற கேள்விக்கே இடமில்லை. அது சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாகும் என அவர் குறிப்பிட்டார். ஆனாலும் இந்திய கலாச்சாரத்தில் தாஜ்மகாலுக்கு இடமில்லை. சரித்திரத்தில் தாஜ்மகால் பற்றிய பகுதிகளை நீக்கிவிட்டு புதிய சரித்திரம் எழுத வேண்டியது அவசியம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் சமீபத்தில் கூறியிருந்தார்.
அதை குறிப்பிட்டு கேட்டபோது தாஜ்மகாலை யார் கட்டியது எப்படி கட்டப்பட்டது என்ற கேள்விகள் தேவையில்லாதது. பாரத மாதாவின் குழந்தைகள் ரதத்தமும் வியர்வையும் அதனை உருவாக்கி உள்ளன. அதன் கட்டுமான திறனுக்காக உலகமெங்கும் புகழ்பெற்றது தாஜ்மகால். சரித்திர கால சின்னமான அதனை பாதுகாப்பது அரசின் கடமை. அதாவது தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பையும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை ஆகும். மாநிலத்தில் உள்ள ராணி லட்சுமிபாய் கோட்டை(ஜான்சி), சுனார் கோட்டை(மிர்சாபூர்), கலிஞ்சர் கோட்டை(பண்டா) ஆகிய இதர வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்களையும் சுற்றுலாவின் வளர்ச்சிக்காக மாநில அரசு மேம்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டார்