🕰️டேபிள் டென்னிஸ் ➡️ வீடியோ கேம்: வரலாற்றை மாற்றிய ‘பாங்’ !

🕰️டேபிள் டென்னிஸ் ➡️ வீடியோ கேம்: வரலாற்றை மாற்றிய ‘பாங்’ !

ம்.. உலக வீடியோ கேம் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ‘பாங்’ (Pong) விளையாட்டு அறிமுகமான நாள்.

1972ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட பாங், பெரும்பாலும் உலகின் முதல் வெற்றிகரமான வீடியோ கேமாக அங்கீகரிக்கப்படுகிறது. இது டேபிள் டென்னிஸை அடிப்படையாகக் கொண்ட ஒரு எளிய இருபரிமாண ஆர்கேட் (நாணயம் போட்டு விளையாடும்) விளையாட்டு. இதன் எளிமை காரணமாக, இது இன்றும் விளையாடுவதற்கு ஒரு வேடிக்கையான விளையாட்டாகவே இருந்து வருகிறது.

மேசைப் பந்தாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டின் மகத்தான வெற்றியே, இன்று சுமார் ₹19 லட்சம் கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் மிகப்பெரிய வணிகத் துறையான வீடியோ கேம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.

உண்மையில், பாங்கிற்கு முன்னரே கணினியுடன் ஊடாடி விளையாடும் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1940இலேயே, நிம் என்ற கணிதவியல் விளையாட்டை மின்காந்த இடைமாற்றி மூலம் விளையாடும் நிமேட்ரான் போன்ற விளையாட்டுகள் வந்தன. ஆனால், அவற்றில் வீடியோ அம்சமே இருக்கவில்லை. படக்குழாய் எனப்படும் கேத்தோட் ரே ட்யூப் (CRT) கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, உண்மையிலேயே வீடியோவைக் கொண்ட விளையாட்டுகள் உருவாகின.

1947இல் உருவாக்கப்பட்ட கேத்தோட் ரே ட்யூப் அம்யூஸ்மெண்ட் டிவைஸ் முதல் வீடியோ கேம் கருவியாகக் குறிப்பிடப்பட்டாலும், 1933இல் நாணயம் போட்டு விளையாடும் ‘பின்பால்’ விளையாட்டு அறிமுகமானதிலிருந்தே ஆர்கேட் விளையாட்டுகளின் வரலாறு தொடங்கியது. 1950-60களில், கல்லூரி வளாகங்களில் மெயின்ஃப்ரேம் கணினிகள் புழக்கத்துக்கு வந்த பிறகு, 1962இல் ஹார்வர்ட் மற்றும் மாசாச்சூசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஊழியர்களால் உருவாக்கப்பட்ட ‘விண்வெளிப் போர் (ஸ்பேஸ்வார்)’ என்ற கேம் முதன்முதலில் பரவலாக அறியப்பட்ட கணினி வீடியோ கேமாக இருந்தது.

கணினிகள் பரவலானதும், நிரல்கள் எழுத எளிமையான மொழிகளின் வரவும் அதிக வீடியோ கேம்கள் உருவாகக் காரணமாயின. அட்டாரி நிறுவனமே 1971இல் “கம்ப்யூட்டர் ஸ்பேஸ்” என்ற கேமை வெளியிட்டிருந்தாலும்கூட, இந்த பாங்-தான் வீடியோ கேம் புரட்சியைத் தொடங்கிவைத்தது. ஏராளமான ஆர்டர்கள் குவியவே, அட்டாரி உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் புதிய ஊழியர்களை நியமித்து, 1973இல் பாங்-ஐ வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

இன்று, ‘கேமிங் கணினி’ என்பது கணினிகளின் உயர்ந்த திறனைக் குறிக்குமளவுக்கு இந்தத் துறை விரிவடைந்துள்ளது. இந்த மாபெரும் வீடியோ கேமிங் துறையின் ஆரம்பப் புள்ளி, 1972 நவம்பர் 29 அன்று வெளியான எளிய பாங் விளையாட்டுதான் என்பதில் சந்தேகமில்லை.

தனுஜா

Related Posts

error: Content is protected !!