June 4, 2023

பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

மோடி தலைமையிலான பாஜகவின் மத்திய அரசு, கடந்த 2016ம் ஆண்டு பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, பினாமி பெயரில் சொத்து வாங்கினால், அவர்களின் சிறை தண்டமனை 7 ஆண்டுகள் என அதிகரிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், பினாமி சட்டத்தை அமல்படுத்த தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமைநீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது. பல கட்ட விசாரணைக்கு பிறகு, இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த பினாமி சட்டத்தை பின்னோக்கிப் பயன்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த 2016 திருத்தச் சட்டத்தின் பிரிவு 3 அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறிய நீதிமன்றம், 2016 சட்டத்தின் வருங்கால விளைவு மட்டுமே உள்ளது என்றும், இதனால், திருத்தத்திற்கு முன் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட்கூறியது.

மேலும் சட்டத்தில் உள்ள பிரிவு 3ல் உள்ள ஷரத்துபடி, எந்தவொரு பினாமி பரிவர்த்தனையிலும் ஈடுபடும் எந்தவொரு நபரும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார் என்று கூறுகிறது. இது “அரசியலமைப்புக்கு எதிரானது” என்று கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட் கருதிய சட்டத்தின் பிரிவு 3ஐ ரத்து செய்ததுடன், பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 நவம்பர் 1ஆம் தேதிக்கு முன் தேதியிட்டு அமலாகாது என்றும் தெரிவித்து உள்ளது.