சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட தடை தொடரும் –சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு முழு விபரம்!

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட தடை தொடரும் –சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு முழு விபரம்!

தமிழக அளவில் பெரும் சர்ச்சையக் கிளப்பிய சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலம் செல்லும் 8 வழி சாலை திட்டம் தொடர்பாக 1956-ஆம் ஆண்டு தேசிய பெருவழிகள் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்த அறிவிக்கையின் அடிப்படையில் நிலங்களை தேசிய பெருவழி ஆணையம் தன் உடமை ஆக்குவதற்கு முன்பு விவசாயிகளின் நில ஆவணங்களை திருத்த உத்தரவிட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இந்த உத்தரவு காரணமாக நில ஆவணங்கள் அனைத்தும் விவசாயிகள் பெயருக்கு மீண்டும் திருத்தப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக சேலம்-சென்னை இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. மத்திய அரசின், ‘’பாரத்மாலா’’ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமை யாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பில், ‘சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது செல்லும்.தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில்தான் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த தீர்ப்பு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

சென்னையிலிருந்து சேலம் வரை 8 வழிச் சாலை அமைக்க நில ஆர்ஜிதத்துக்கான நடவடிக்கை கள் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் இந்திய வனச்சட்டம் கீழ் முறையானதாக அமையவில்லை என்று முன்வைக்கப்பட்ட வாதங்கள் பற்றி தான் கருத்து எதுவும் கூறவில்லை. இந்த வாதங்களை கீழமைவு நீதிமன்றங்களில் எழுப்பி பாதிக்கப்படும் நிலவுடைமை யாளர்கள் மனுச் செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

ஆனால், அதே நேரத்தில் சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி சாலை அமைப்பதற்கான அறிவிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருப்பதால். அதனடிப்படையில் நில ஆர்ஜித துக்கான ஒப்புதல் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை ஆகியவற்றின் அனுமதிகள் ஆகியவற்றை புதிதாக பெற தேசிய பெருவழி ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு தரப்பினருக்கும் திருப்தி தரும் வகையில் அமைந்திருக்கிற காரணத்தினால், இருதரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கிய தீர்ப்பின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (140 பக்கம் உள்ள, தீர்ப்பு முழுவதையும் பார்வையிட இங்கே சொடுக்கவும்)

Related Posts