அமெரிக்காவில் பாதுகாப்பு சுவர் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி! ட்ரம்ப் ஹேப்பி!

அமெரிக்காவில் பாதுகாப்பு சுவர் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி! ட்ரம்ப் ஹேப்பி!

பல தரப்பிலிருந்து வரும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் எழுப்புவதற்கு அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பளித்து உள்ளதை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளார்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லை வழியாக ஊடுறுவதை தடுக்கும் வகையிலும், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை காக்கவும் எல்லையில் பலமான சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார்.அதற்காக பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டில் 500 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் கோரினார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்க்கவில்லை.

அதன் காரணமாக இந்த ஆண்டு துவக்கத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்த அதிபர் டிரம்ப் எல்லை சுவருக்கு தேவையான நிதி ஒதுக்க வழிவகை செய்தார்.அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் எல்லை சுவர் எழுப்புவதற்கும் அதற்கான நிதி ஒதுக்குவதற்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிபர் ட்ரம்ப்புக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினர். அமெரிக்கா – மெக்ஸிகோ இடையே அமைக்கப்படும் எல்லைச் சுவருக்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அனுமதியளித்தனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.. “எல்லைச் சுவர் விவகாரத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் தென்பகுதியில் சுவர் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது” என்று அதிபர் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!