தஞ்சை மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்துக்கு மதமாற்றம்தான் காரணம் என்று பாரதீய ஜனதா சர்ச்சை கிளப்பிய நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர், “ தஞ்சை மாணவி வழக்கில் மனுதாரர் சிபிசிஐடி விசாரணை கேட்டிருந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது ஏற்புடையது அல்ல. பள்ளி மாணவி மரண விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்காமல் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது சரியல்ல. ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றும் அதிகாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள தவறியுள்ளது. அதனால் சிபிஐ விசாரிக்க தடை விதிக்க வேண்டும்” என சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள்,” மாணவி தற்கொலை வழக்கை ஐகோர்ட் உத்தரவின்படி, சிபிஐ விசாரிக்கட்டும். சிபிஐ விசாரணையில் நாங்கள் தலையிடுவது பொருத்தமாக இருக்காது. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் ஐகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நாங்கள் பார்க்கிறோம். அதனால், சிபிஐ விசாரிக்கட்டும். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு சிபிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிபிஐ விசாரணை உத்தரவை கவுரவ பிரச்சினையாக தமிழ்நாடு அரசு கருத வேண்டாம்” என்று கூறிய நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனுவிற்கு மாணவியின் தந்தை நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.