சூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம் ! – ஹைடெக்கான கழிவறை வாகனம்!
பாயிண்ட் நம்பர் 1
கள்ளக் காதல் – இந்த வார்த்தை அன்றாடம் நாளிதழில் இடம் பெறும் சமாச்சாரம்தான். இந்த கள்ளக் காதலால் கொலை அல்லது தற்கொலை நடந்தது என்ற செய்தியும் இத்துடன் இணைந்தே வருவதையும் கவனிக்கலாம்..
பாயிண்ட் நம்பர் 2
உலகளவில் போர்னோ எனப்படும் பலான படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் பல ட்ரிபிள் எக்ஸ் ஆல்பங்களில் தொடக்கத்தில் எச்சரிக்கை.. இதில் உங்களுக்கு அறிமுகமானவர் படம் கூட இருக்கலாம் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதையும் கவனிக்கலாம்.
பாயிண்ட் நம்பர் 3
நம் நாட்டில் வாழுவோரின் மதம் என்பது அவரவர் தனிப்பட்ட எண்ணமும், உரிமையும் ஆகும்.. அதே சமயம் தான் சார்ந்த மதத்தை உயர்த்தி பிற மதத்தை இழிவுப் படுத்த சட்டம் கூட அனுமதிக்க வில்லை என்பது கவனிக்கலாம்.
பாயிண்ட் நம்பர் 4
மனித குலத் தோன்றலின் போதே ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் வாழ்ந்து வரும் மனிதப் பிறவிகள்தான் அரவானிகள். ஆனால் இந்த அரவானி எனப்படும் திருநங்கைக்கு குழந்தை பாக்கியம் அறவே கிடையாது என்பதுதான் கவனிக்கத்தக்கது..
மேற்படி நாலு பாயிண்டுகளும் வயதுக்கு வந்தோர் கூட கொஞ்சம் ஆழமாய் யோசித்து அலச வேண்டிய விஷயங்கள்.. ஆனால் இதே நான்கு பாயிண்டுகளின் பின்னணியில் வெவ்வேறு சூழலில் நடக்கும் அடல்ஸ் ஒன்லி விவகாரங்களை மட்டும் எடுத்து வெட்டி ஒட்டி மக்கள் செல்வன் என்ற வெள்ளி ஜிகினி பேப்பர் வேறு சுற்றி சூப்பர் டீலக்ஸ் என்ற பெயரில் ஒரு முழு டாய்லெட் வாகனத்தை சினிமா என்ற பெயரில் வழங்கி இருக்கிறார்கள்.
ஒரு வீடு அதுவும் மிகப் பிரமாண்டமான வீடு கட்டினால் அதில் வராண்டா, வரவேற்பறை, முற்றம், படுக்கையறை, சமயலறை, பூஜையறை எனப் பலத் தரப்பட்ட அறைகளுடன் கழிப்பறையும் கொண்டதுதான் இல்லம். ஆனால் வெறும் கழிப்பறையை மட்டுமே கொண்டு ஒரு வீடு கட்ட முடியுமா என்ற கேள்விக்குத்தான் ‘ சூப்பர் டீலகஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை வழங்கி ‘இதோ முடியுதே’ என்று உரத்தக் குரலில் சொல்லி இருக்கிறார்கள். இந்த கழிப்பறையையும் ஓசியில் கண்ட சில பல கழிசடைகள் ஆஹா.. ஓஹோ முக்கி முனங்கும் குரலும் கொஞ்சூண்டு கேட்பதுதான் எரிச்சலாக இருக்கிறது.
அதே சமயம் இதே படம் குறித்து ‘வண்ணத்துப்பூச்சி’, ‘குகன்’ ஆகிய படங்களை இயக்கிய ராசி அழகப்பன், ‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்துத் தன்னுடைய முகநூலில் “ ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தேன். முதலில் பாராட்டு. புதிய முயற்சிகளோடு, புதிய கண்ணோட்டத்தோடு எடுக்கப்படும் படத்திற்கு. ஆனால், அதுவே போதும் என்று நினைத்துவிட்டால், இல்லை என்றுதான் நான் சொல்வேன். எதார்த்தமாக இதுபோன்ற நிகழ்வுகள் வாழ்க்கையில் நடக்குமா? என்றால், பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இதுபோன்று சில நிகழ்வுகள் புனையப்பட்டு எடுப்பதன் மூலம், பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை இயக்குநர் பார்வையில் பார்வையாளர்களுக்கு கடத்த முடியும் என்பதும் உண்மை.
நான்கு விதமான கதைத் தளங்கள். 1.திருமணமான தம்பதிகளுக்கிடையில் ஒரு காதலனுடன் உடலுறவு வைத்துக்கொண்டு, இறந்தபின் நடக்கும் நிகழ்வுகள். 2.நான்கு விடலைப் பிள்ளைகளின் பிட்டு படம் பார்க்கும் அனுபவத்தால் கிடைக்கும் பிரச்சினைகள். 3.சுனாமியில் இருந்து தப்பித்த மிஷ்கின் குடும்பத்தின் கதை. 4.திருமணமாகி குழந்தை பெற்றபின் திருநங்கை ஆகிவிடுகிற ஒரு கணவனின் கதை.
இவை யாவும் குறுக்குவெட்டுக் காட்சிகளின் மூலம் கிடைக்கும் திரைக்கதை சுவாரசியமாகத்தான் நகர்கிறது. ஆனால், யாவும் முகம் சுளிக்க வைக்கிற சில காட்சிகளால் சங்கடத்தை ஏற்படுத்து கிறது. விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நடத்தைகளுக்கு உடன்படும் காட்சி. தன் காதலனை, தான் சேர்த்துக்கொண்ட விதம் மேட்டர் என்று சொல்லி அடிக்கடி சிரமப்படுத்தும் காட்சி. மிஷ்கினின் அளவு கடந்த நீளமான வசனம் உள்ள காட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, சப் இன்ஸ்பெக்டராக நடிப்பவரின் அதீதமான நடிப்பு” என்று சொன்னவர் தான் சார்ந்த தொழில் என்பதால் டாய்லெட் வீட்டின் விஸ்தீரனம், மேல்பூச்சு, பெயின்ட் வாசனை அல்லது நாற்றம் போன்றவற்றை சிலாகித்து விட்டு ‘பாராட்ட நிறைய இருந்தாலும், என்னவோ ஒரு தளர்ச்சி இருக்கிறது’ என்ற உண்மையைச் சொல்லி இருக்கிறார்.
அதே சமயம் இயக்குநர் மித்ரன் என்றொரு அறிவி ஜீவி , ‘ஒரு பெரிய பீரங்கியை எடுத்துக் கொண்டு மனிதர்கள் உருவாக்கிய ஒவ்வொரு சமூக கட்டமைப்பையும் உடைத்தால் என்ன ஆகும்? அதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’. குழந்தை வளர்ப்பு, நட்பு, மதம், சரி – தவறு என அனைத்துக்குமான வரையறையை மாற்றி அமைத்துள்ளது. இயற்கையிலிருந்து இயல்பை வேறுபடுத்தும் அடிப்படை விதிகளையே படம் கேள்வி கேட்கிறது. அசந்து விட்டேன்’ என்று புழங்காகிதம் அடைந்துள்ளார். பாவம் கழிவறை சுகம் காண்பவர் போலும்.
சினிமா என்பது பொழுது போக்கு என்பதையும் தாண்டி சில பல நல்லவைகளையும் கற்று கொடுத்தது.. இப்போதும் உருப்படியான பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.. ஆனால் நரகல்களின் கூடாரமான இந்த சூப்பர் டீலக்ஸ் படம் தவறான வாழ்க்கை முறையை சரி என நம்வ வைக்கும் போக்கு அபாயகரமானது. சின்னத் திரை சீரியல்களில் கள்ளக் காதல் உறவு முறை கதைகளை கண் சிமிட்டாமால் பார்ப்போரில் சில சென்சார் கமிட்டி உறுப்பினர் என்ற பெயரில் இருந்து கொண்டு ஏதோ தங்களால் முடிந்த கிரேடுடன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்பதால் அவர்கள் வீட்டிலும் கள்ள உறவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்பதை காலம் ஒரு நாள் உணர்த்தும்.
வேறு வழியில்லாமல் இந்த சூப்பர் டீலக்ஸ் என்ற டாய்லெட் வாகனத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது சக நண்பர் சொன்னது இது:
1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா !
2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா !
3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா !
4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா !
5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா !
6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா !
7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா !
8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா !
9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம்,பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா !
10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா !
11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா !
12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா !
13) திரையில் பெண்களை போகப்பொருளாக ஆக்கியது இந்த சினிமா !
14) “அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே “என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் “விபச்சாரம்” செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா !
15) வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா !
16) இறைவனின் சட்டங்களை புறக்கணிக்க செய்து மனித சட்டங்களின் பக்கம் மக்களை திருப்பியது இந்த சினிமா !
ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மொத்தத்தில் சினிமா என்பது ஓழுக்கச்சீர்கேட்டின் “கையேடு ” விபச்சாரத்தின் “நுழைவாயில்” சமூக சீர் குலைவிற்கான ” ஆயுதம் “ என்பதையெல்லாம் இந்த சூப்பர் டீலக்ஸ் படம் கூட முழுமையாக சுட்டிக் காட்டுகிறது’ என்றார்..
உண்மைதான் என்று தலையாட்டி விட்டு ‘அது சரி.. அடுத்த வாரம் என்ன படமெல்லாம் ரிலீஸாகுது’ என்றோம்..
வேறு வழி?
மார்க் 2 / 5