தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமுலில் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 6–ம் கட்ட ஊரடங்கு உத்தரவு 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை நீடித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஊரடங்கு அமலில் இருந்தாலும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் கொரோனா பரவலை தடுப்பதற்காக இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தமிழகம் முழுவதும், எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி நாளை (3வது வாரமாக) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதாவது இன்று (18–ந்தேதி) நள்ளிரவு 12 மணி முதல் 20–ந்தேதி காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்த விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
எனவே, பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து, கொரோனா பரவலை தடுக்க அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம் சென்னை போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவரச மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330 / 044-23452362 அல்லது 9003130103 எனும் எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது