இலங்கையில் மீண்டும் அவசர நிலை அறிவிப்பு!

இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பின்படி, சமூக அமைதியின்மையைத் தணிக்கவும், தீவு தேசத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் முயல்வதால், அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பொது அமைதியை பாதுகாக்கவும், சட்ட ஒழுங்கை கடைபிடிக்கவும், அத்தியாவசிய பொருள்கள், சேவைகள் விநியோகத்தை முறையாக வைத்திருக்கவும் இந்த அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 40(1)(c)இன் அடிப்படையில் அதிபருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றின் எதிரொலியாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரிசி, கோதுமை போன்ற உணவு பொருள்களின் தட்டுப்பாடு, கடுமையான மின்வெட்டு, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இந்த சூழலுக்கு இலங்கை அரசின் மோசமான கொள்கைகளும் ஊழல் நிரம்பிய ஆட்சியே காரணம் என்ற புகாரில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு சூறையாடினர்.
மக்கள் போராட்டத்தின் காரணமாக அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். தனது பதவியை கோத்தபய ராஜினாமா செய்த நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். புதிய அதிபர் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளராக ரணில் முன்னிறுத்தப்படுகிறார். இந்த நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும், இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை லிட்டருக்கு தலா ரூ.20 குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.