ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்குப் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூர்  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்குப் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதிக்கு வத்திராயிருப்பைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அவருக்கு வயது 63.

வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு நாட்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொரோனா அறிகுறியுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவருக்குப் பதிலாக அவருடைய மகள் திவ்யாராவ், மற்றும் கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாதவராவ் உடல் நிலை பாதிப்பால் அவர் மகள் வேட்பாளராக மாற்றப்படுவார் என்று கூட தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு எந்த நடவடிக்கையையும் கட்சி மேலிடம் எடுக்கவில்லை. மாதவராவ் சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் நூரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7.55 மணி அளவில் மாதவராவ் உயிரிழந்தார்.

தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இவருக்குச் சொந்த வீடு இருந்தாலும் தொழில் ரீதியாக சென்னையில் வசித்து வந்ததார். இவரது மனைவி மருத்துவ தொழில் பணிபுரிந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு திவ்யா என்ற மகள் மட்டும் உள்ளார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இறந்த மாதவராவின் உடல் திருவில்லிபுத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மே 2 ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கம்போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலில் ஒருவேளை மாதவராவ் வெற்றிபெறும் பட்சத்தில் அத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என்று விளக்கமளித்தார்.