நடிப்பு மட்டும் போதாது.. கனவுடன் வளருங்கள்!

நடிப்பு மட்டும் போதாது.. கனவுடன் வளருங்கள்!

தொலைக்காட்சி, விளம்பரம், திரைப்படம் உள்ளடக்கிய பொழுதுபோக்கு தொழில்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது சட்டப்படி சரியா? 2017 ம் வருடத்தின் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தத்தின்படி சில நிபந்தனைகளுடன் அவர்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறது. ஒரு நாளைக்கு குழந்தை நடிகர்களை அதிக பட்சமாக 5 மணி நேரம் மட்டுமே நடிக்கவைக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேல் நடிக்க வைக்கக் கூடாது. இது போன்ற நிபந்தனைகள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்பது வேறு விஷயம். ஆனால் தொழிற்சாலைகளில் காட்டும் கெடுபிடிகளை குழந்தைத் தொழிலாளர்கள் நலம் காக்க வேண்டிய அதிகாரிகள் இங்கே காட்டுவதில்லை.

சமீபத்தில் யூ டியூப் சேனலில் தன் நடிப்பால் கவர்ந்த ரித்விக் என்கிற 7 வயது சிறுவன் திடீர்ப் புகழ்பெற்று ஒரு வாரத்திற்குள் அத்தனை தொலைக்காட்சி பேட்டிகளிலும் வந்துவிட்டான். (அவனுடைய ஒரு வீடியோவை நானும் இங்கேப் பகிர்ந்திருந்தேன்.) அவனை நோக்கி பல திரைப்பட வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இன்னும் மழலை மாறாத அந்தச் சிறுவனின் நடிப்புத் திறமை நிஜமாகவே வியப்பில் ஆழ்த்துகிறது.

பலர் அவனை வரவேற்று பாராட்டி பதிவுகள் போட்டிருந்தாலும் சிலர் அவன் பெற்றோரை விமரிசித்து பதிவுகள் போட்டிருப்பதையும் பார்த்தேன். அவனை வைத்து அந்தப் பெற்றோர் பணம் சம்பாரிக்கப் போகிறார்கள், அவனுடைய குழந்தைமையை கெடுக்கப் போகிறார்கள் என்று பலவிதமாகவும் எதிர்மறைக் கருத்துகள்.

குழந்தை நட்சத்திரங்களை நடிப்புத் துறையில் ஊக்குவிக்காமல் விட்டிருந்தால் நமக்கு கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்ட ஏராளமான அருமையான நடிகர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். அந்த சிறுவனுக்கு நடிப்புத் துறையில் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் அதை ஊக்குவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான எல்லோருமே கமல்ஹாசன்களாக, அமீர்கான்களாக ஆகிவிடவில்லை என்பதை அந்தப் பெற்றோர் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே.. சட்டம் அனுமதிக்கும் விதிமுறைகளுக்கு உடபட்டுதான் என் பையன் நடிப்பான், அவனுடைய கல்வியைப் பாதிக்காத சமயங்களில்தான் நடிப்பான் என்று நிபந்தனைகளுடன் நடிப்பு வாய்ப்புகளை ஏற்கலாம். நடிப்பு மட்டுமே உன் எதிர்காலம், உனக்கு வேறு லட்சியங்கள் தேவையில்லை என்று மட்டும் அவன் மனதில் முத்திரை குத்திவிடக் கூடாது. ஒரு பேட்டியில் அந்தச் சிறுவன் தனக்கு விண்வெளி வீரனாக ஆக ஆசை என்கிறான். நடிப்பாற்றலுடன் அந்தக் கனவையும் சேர்த்தே வளர்க்க வேண்டும்.

பட்டுகோட்டை பிரபாகர்

Related Posts

error: Content is protected !!