கொங்குநாடு உருவாக வாய்ப்பு ராஜா.. வாய்ப்பிருக்கு! அதனால் அதிக கவனம் தேவை!
கொங்கு நாடு என்கிற தனி யூனியன் பிரதேசத்தை ஒன்றிய அரசு உருவாக்கப் போவதாகக் குதூகலத்துடன் ‘பலே திட்டம்’, ‘விளையாட்டுக் காட்டுவது’ என்கிற சொற்களை எல்லாம் பயன்படுத்தி ஜூலை 10ஆம் தேதியிட்ட ‘தினமலர்’ நாளிதழ் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது, அப்படி நியமிக்கப்பட்டபோது அவரைப் பற்றிய குறிப்பில் அவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டிருப்பது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன் பா.ஜ.க தேசிய மகளிர் அணி செயலாளராக ஆக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. இதன் மீது கருத்து சொல்ல முற்பட்டிருக்கும் பலரும் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதை எள்ளி நகையாடுகிறார்கள். இந்தத் திட்டம் நிறைவேறாது என்றும் உறுதி தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான பதிவுகள் கேலியும் கிண்டலுமாக இருக்கின்றன. இது கேலி கிண்டலுக்குரிய ஒரு விசயமல்ல. உண்மையில் கவலைப்பட வேண்டிய, அரசியல் உறுதியோடு போராடி முறியடிக்க வேண்டிய ஒரு கருத்து என்பதை மறந்து விடக் கூடாது.
விடுதலைப் போராட்டக் காலத்திலேயே மொழிவாரி மாநிலங்கள் என்கிற கோரிக்கை வலுவாக முன் வைக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய தேசிய காங்கிரஸ் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால், நாடு விடுதலை அடைந்த பிறகு உடனடியாக மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாகவே State Reorganisation Committee அமைக்கப்பட்டது.
ஐக்கியக் கேரளம், ஒன்றுபட்ட தமிழகம், விசாலாந்திரா, சம்யுக்த மகாராஷ்டிரா என்று நாட்டின் பல பகுதிகளிலும் தனி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வீரியத்துடன் எழுந்தன. மக்கள் தங்கள் மொழிவாரி உரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்குப் போராடினார்கள். பல பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டனர். குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் இணைத்து மும்பையை தலைநகரமாகக் கொண்டு ஒரு மாநிலம் என்று அறிவிக்கப்பட்டபோது எழுந்த போராட்டத்தில் மட்டும் 163 பேர் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகுதான் மகாராஷ்டிரா, குஜராத் என்று இரண்டு மாநிலங்களாக அவை பிரிக்கப்பட்டன.
ஆனால், விடுதலைப் போராட்டக் காலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரத்தினர் மொழிவாரி மாநிலங்களையோ, கூட்டாட்சி முறையையோ ஏற்றுக் கொள்ளவில்லை. கூட்டாட்சி என்பது இந்தியாவைப் பிளவுபடுத்திவிடும் என்று அவர்கள் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். எனவே, ஒரே நாடு, ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம் என்கிற கருத்தைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் இரண்டாவது தலைவரும், அவர்களால் குருஜி என்று அழைக்கப்பட்டவருமான கோல்வால்கர் ஒற்றை ஆட்சி முறைதான் சிறந்தது; கூட்டாட்சித் தத்துவம் கேடானது என்று தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்தார். அதே போன்று மாநிலங்களைப் பொறுத்தமட்டில் மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானவை என்றும் எனவே, மாநிலங்கள் அமைக்கப்படும்போது மொழிவாரியாக அமைக்கப்படக் கூடாது என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். மேலும், நிர்வாக வசதியின் அடிப்படையிலேயே மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் வலுவான மாநிலங்கள் ஒன்றிய அரசைக் கேள்வி கேட்கும் திறனுடன் இருப்பார்கள். எனவே, சிறு மாநிலங்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரே மொழி பேசும் மக்களைப் பல்வேறு மாநிலங்களாகத் துண்டாட வேண்டுமென்றும், இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மாநிலத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் மக்களைக் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.
2009 டிச.13 அன்று தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மாநிலங்கள் அமைக்கப் படுவதற்கு மொழி ஒரு காரணியாக இருக்கக்கூடாது என்றும் சிறியதோ பெரியதோ நிர்வாக வசதிக்குத் தகுந்தாற்போல் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோபன்கேஹனில் பேசியிருக்கிறார்.
இதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.வைத்தியா ஒவ்வொரு மாநிலமும் சிறு சிறு மாநிலங்களாக உடைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 50 லட்சம் மக்கள் தொகையும் அதிகபட்சம் 3 கோடி மக்கள் தொகையும் மட்டுமே ஒரு மாநிலத்தில் இருக்க வேண்டும் என்றும் பேசினார். இப்படி இவர்கள் பேசுவது மட்டுமல்ல, பல வகைகளில் நிர்பந்தித்தும் வந்திருக்கிறார்கள்.
பழங்குடியின மக்கள் தனியாக வாழும் பகுதிகளைத் தனி மாநிலங்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உத்தராகாண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும், உண்மையில் சங் பரிவாரின் சிறு மாநிலங்கள் பற்றிய கருத்தே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இதன் தொடர்ச்சியே சில ஆண்டுகளுக்கு முன்பு விசாலாந்திராவுக்காகப் போராடிய மக்களை ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களாகத் துண்டாடுவதற்காகச் செய்த முயற்சியின் காரணமாக அவர்கள் பெற்ற வெற்றியுமாகும்.
எனவே, கொங்கு நாடு பற்றிய தினமலரின் செய்திக் கட்டுரை சங் பரிவாரின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பது, மொழிவாரி மாநிலங்களைச் சிதைப்பது, வலிமையும் அதிகாரமுமற்ற சிறு சிறு யூனியன் பிரதேசங்களாக உடைப்பது என்கிற ஒட்டுமொத்த இந்தியாவைச் சீரழிக்கும் ஒரு திட்டத்தின் பகுதியே ஆகும்.எனவே, இந்தப் பிரச்சனையை மேலோட்டமாகவும் கிண்டலாகவும் தீவிரத் தன்மையற்றும் அணுகுவதும் ஆபத்தானது. இதையொட்டிய இன்னொரு பிரச்சனையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவுதான் ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றுவதற்கோ, பரப்பளவை மாற்றுவதற்கோ, இரு மாநிலங்களை இணைப்பதற்கோ, ஒரு மாநிலத்தை இரண்டாக்குவதற்கோ உரித்தான அதிகாரத்தை வழங்குகிறது. இப்படிச் செய்வதற்கான எந்தவொரு மசோதாவையும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்றும் அப்படி அனுப்புவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் / மாநிலங்களின் சட்ட மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்போதும் கூட சம்பந்தப்பட்ட மாநில சட்ட மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று சொல்லப் படவில்லை.
இதைக்கூட தற்போதுள்ள பா.ஜ.க அரசு சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. அதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியபோது அந்த மாநிலச் சட்ட மன்றத்தில் இது விவாதிக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனை தற்போது உச்ச நீதி மன்றத்தில் இருக்கிறது. வழக்கம் போலவே உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சனையில் அவசரம் காட்டவில்லை. இத்தகைய சூழலில் தமிழக சட்ட மன்றம் இது குறித்து விவாதித்தாலும் அதற்கெதிராக 100 சதவிகிதம் கருத்து தெரிவித்தாலும் மாநிலத்தை உடைப்பதற்கான அதிகாரம் கொண்டதாகவே அரசமைப்புச் சட்டத்தை சங் பரிவார் பயன் படுத்துகிறது.
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் பா.ஜ.க என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸால் வழி நடத்தப் படுகிற அமைப்பின் அரசாங்கத்திற்கு நாட்டின் ஒற்றுமை, மக்கள் நலன், மக்களின் ஜனநாயம், கூட்டாட்சித் தத்துவம், அரசமைப்புச் சட்டம் இவற்றைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத, நாட்டின் விடுதலைப் போராட்டத்தின்போது இவை எல்லாம் மக்களின் கோரிக்கைகளாக இருந்தன என்பதைப் பற்றிய அக்கறையில்லாத சங் பரிவார் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நம்புவதற்கு எவ்வித இடமும் இல்லை. குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்து விட்டு இந்தப் பூமாலை வலுவானது, பிய்த்தெறிய சாத்தியமில்லாதது என்று நம்புவது எத்தனை சிறு பிள்ளைத்தனமாக இருக்குமோ, அப்படித்தான் தமிழகத்தை உடைக்க முடியாது என்கிற நம்பிக்கையும். எனவே, இந்தப் பிரச்சாரத்தை அதற்குரிய அரசியல் முக்கியத்துவத்தோடும், நாட்டு நலன், மக்கள் ஒற்றுமை, தமிழக நலன் என்கிற நோக்கிலிருந்து அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் சங் பரிவாரின் திட்டமிட்ட இந்தக் கெடு முயற்சிக்கு எதிராக முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும்.