ஸ்கெட்ச் – விமர்சனம் =ஒரு தபா பார்க்க தக்க படம்தான்!

ஸ்கெட்ச் – விமர்சனம் =ஒரு தபா பார்க்க தக்க படம்தான்!

பொழுது போக்கு சாதனமான சினிமாவில் அவ்வப்போது நெத்திப் பொட்டில் அடித்தாற் போல் சமூக பிரச்னையை சுட்டிக் காட்டுவது வழக்கம்தான். அதே சமயம்  வணிக மயமாகி விட்ட கோலிவுட்டில் பலரும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனாலும் அண்மையில் வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கிய ‘வேலைக்காரன்’ கொஞ்சம் ஆழப் புரையோடிப் போன ஒரு விஷயத்தை தொட்டிருந்தார். அந்த வரிசையில் தற்போது விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ மிக முக்கியமான ஒரு சமூக அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டி தனிக் கவனம் பெறுகிறது. அதாவது தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக இளம் சிறார்கள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்பதிவு புள்ளிவிபர அறிக்கையின்படி, கடந்த 2015ல் தமிழகத்தில் 2,795 சிறார்கள், 2016ல் 2,927, நடப்பாண்டில் (2017) இதுவரை 3,235 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் 32.5 சதவீதம் பேர் வெறும் எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மற்ற மாநிலங்களில் எச்சரிக்கப்பட்டு, விடுவிக்கப்படும் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை 12 சதவீதமாக உள்ளது என்பதெல்லாம் உங்களில் எத்தனை பேருக்கு  தெரியும்? அடடே..  அதெல்லாம் தெரியாது என்றால் உடனடியாக இந்த ஸ்கெட்ச் பாருங்கள்.. அதிர்ந்து போவீர்கள்.

 

அதாவது நம்ம தமிழ் சினிமா இயக்குநர்களின் ஆதர்ச களமாகி விட்ட நார்த் மெட்ராஸூல் நடக்கும் கதைதான் இது. அந்த ஏரியாவில் கார், பைக்குகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் ஒரு சேட்டு -விடம் ஊழியனாக இருக்கிறார் விக்ரம். ஒரு பக்கம் லோன் கட்டாதவர்களிடம் இருந்து வண்டிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கிக் கொண்டபடி ஐயராத்து அம்மணி தமன்னாவை லவ்-ஸூகிறார்.. இதனிடையே இவரின் வளர்ச்சியைப் பிடிக்காத எதிர் கோஷ்டி ஆர்.கே.சுரேஷுடன் அவ்வப்போது மோதல் நடக்கிறது.

அதே போல் அந்த பகுதி முக்கியஸ்தர் ஒருவரின் காரை தூக்கும் போது சில பல சிக்கல்கள் வந்து, அதை எதிர் கொள்ளும் போது நடக்கும் போக்குதான் மிச்சக் கதை. இதன் முடிவில்தான் யாருமே எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் வைத்து கூடவே இந்த விமர்சனத்தில் சொன்ன சில புள்ளி விவரங்களை விளக்கி டைட்டில் கார்ட் போடுகிறார் டைரக்டர்.

பல்வேறு படங்களில் தன் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விக்ரம் இப்படத்திற்க்காக அதையெல்லாம் பொருட்டாக நினைக்காமல் நடிப்பில் தனித்துவம் காட்டியிருக்கிறார்.
அவ்வப்போது ஸ்கெட்ச் போடுவது, காதலிப்பது, அரட்டை அடிப்பது என்று படம் முச்சூடும் வந்து படத்தை தன் தோளில் போட்டுக் கொண்டு நகர்த்துகிறார். தமன்னா.. விக்ரமின் முதிர்ச்சிக்கு ஏற்ற ஜோடி.. நடிப்புக்கான சீன்களை விட இவருக்கு பாடல் சீன்கள்தான் அதிகம்.. அதை உணர்ந்து தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

அதே சமயம் தமன்னாவின் தோழியாக வரும் ஸ்ரீபிரியங்கா தனியா தெரிகிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் ஒட்டு மொத்த குரூப்-பும் மெனக்கெட்டிருப்பது துண்டாக தெரிகிறது. எடிட்டிங்-கை செய்த ரூபன் அளவுக்கு இசை-த்த தமன் ச்கோர் செய்யவில்லை.

அதே நார்த் மெட்ராஸ் .. அதே ரவுடி.. அதே ஹீரோ கெத்து..அதே லவ்..அதே (மெண்டல்) போலீஸ்… அதே பழி வாங்கல் என்று அடுத்தடுத்து தொடரும் அதே கதைகள் அனைத்தும் கிளைமாக்ஸ் சீனில் நொறுங்கி போய் விடுவதென்னவோ நிஜம். ஆனால் இந்த முத்தாய்ப்பு விஷயத்தை முன்னிலைப்ப டுத்தாமல் வயக்கமான பாதையில் பயணிக்கும் ஸ்கெட்ச் – ஒரு தபா பார்க்க தக்க படம்தான் என்று சொன்னால் நம்போணும்.

மார்க் 5 / 2.75

error: Content is protected !!