சைரன் – விமர்சனம்!

சைரன் – விமர்சனம்!

மக்கு அன்றாடம் செய்யும் சமையலில் சாப்பிடத் தூண்டும் வகையில் நாவூறச் செய்யும் அதன் ருசி, மணம், , கவர்ந்திழுக்கும் உணவின் நிறம் , என பல அம்சங்கள் அடங்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, அழகாகவும், அன்போடும் பரிமாறுவதே சிறப்பான அம்சமாகும். அந்த உணவு தயாரித்து பரிமாறும் லாஜிக்கை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கமான பழி வாங்கும் கதையை ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் சைரன் ஒலிகளின் முரண், அப்பா – மகள் செண்டிமெண்ட், , கைதிகளின் மனநிலை, சமூக நீதிப்போராட்டம், காமெடி, காதல், ஃபைட் ஆகியவற்றை அளவான டோஸில் கலந்து கொஞ்சம் தனக்கே உரிய சுவையான பாணியில் டைரக்டர் அந்தோணி பாக்யராஜ் வழங்கி அசத்தி இருப்பதே ஜெயம் ரவியின் சைரன்

அதாவது காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த நாயகன் ஜெயம் ரவி செய்யாத குற்றம் ஒன்றில் ஆயுள் தண்டனைக் கைதியாகி ஜெயிலில் அடைக்கப்பட்டவர் ஒரு கட்டத்தில் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “ அம்மாவை கொன்ற கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியேறி சொந்தகாரர் வீட்டுக்கு போய் விடுகிறார். இச்சூழலில் ஜெயம் ரவி சந்திக்கும் சில பெரும்புள்ளிகள் கொலை செய்யப்பட, அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ் அவரை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கொலைகளை தான் செய்யவில்லை என்று கோர்ட்டில் நிரூபித்துக் கொள்கிறார். ஆனாலும் ஜெயம் ரவி தான் கொலையாளி என்பதில் உறுதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார். இறுதியில் வென்றது யார்?, ஜெயம் ரவி கொலை குற்றவாளியானது எப்படி?, அவரது மகள் மனம் மாறினாளா? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை சொல்லி இருப்பதே ‘சைரன்’ படக் கதை.

மிடில் கிளாஸ் கேரக்டரில் கச்சிதமாக பொருந்திப் போகிறார் ஜெயம் ரவி. அதிலும் அஜித் லுக் ( அதாங்க ‘சால்ட் அண்ட் பெப்பர்’)கில் வந்து அசத்துகிறார். சற்றே வயது முதிர்ந்த ஒரு டீன் ஏஜ் மகளின் அப்பா ரோலில் அவரது நடிப்பும் வசன உச்சரிப்பின் மூலம் ஏற்றுக்கொண்ட திலகன் கேரக்டரும் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு என்று  சொல்ல வைத்து விடுகிறார். அதிலும் ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் அவர் வில்லனால் மிரட்டப்படும் போது “எமனை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அலையும் என்னையே பயமுறுத்த நினைக்கிறாயா..?” என்று கேட்கும் போது சபாஷ் என்று சொல்லும் ரசிகர்கள் குரல் கேட்டது. இன்ஸ்பெக்டராக வரும் கீர்த்தி சுரேஷ், கம்பீரத்தையும், திமிரையும் நடிப்பில் கொண்டு வர ஏதேதோ ட்ரை செய்திருக்கிறார். அவருடைய பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருந்தாலும் முழுமையாக எடுபடவில்லை. .மனைவியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் கிடைத்த வாய்ப்பிலும் ஜொலிக்கிறார். டி.எஸ்.பி,ரோலில் வரும் சமுத்திரக்கனி ரோல் கொஞ்சம் புதுசு என்றாலும் அவருக்கென்றே உருவாக்கப்பட்ட வசங்கள் புன்னகையை வரவழைத்து விடுகிறது.

சமீபகாலமாக செட் ப்ராப்பர்ட்டியாகிப் போன யோகி பாபு, நீண்ட நாட்களுக்கு பின்னர் சிரிக்க வைக்கும் பணியை செய்திருக்கிறார். ஜெயம் ரவியுடனான அவரது போர்ஷன் சுவையாக இருப்பதென்னவோ நிஜம். அழகம்பெருமாள், அஜய் ஆகிய வில்லன் கதாபாத்திரங்கள் தொடங்கி , ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த துளசி,   தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த சிறுமி என சகலரும், திரைக்கதையோட்டத்தின் போக்கை மிகச் சரியாக கடத்தி சைரனை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்கள்..

இசை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடல்கள் ஓ கே ரகமாக இருக்கிறது. ஷ.சி.எஸ். பின்னணி இசையாம். நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும் ஒரு கொலைகாரன், தகர சீட்டை தரையில் தேய்க்க தேய்க்க, எதிராளி காது சவ்வு வெடித்து, காது மூக்கில் ரத்தம் வந்து இறந்து போவதைக் காட்ட போட்டிருக்கும் பின்னணி இன்னமும் காதில் நிற்கிறது. கேமராமேன் செல்வகுமார். எஸ்.கே காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக அந்த ஆம்புலன்ஸ் சேசிங் மற்றும் ஃபைட் சீன்கள் செம்.   எடிட்டர் ரூபன் கைவண்ணத்தில்    படத்தை இறுதி வரை  ஆர்வமாக பார்க்க வைத்து விடுகிறார்.

முன்னரே சொன்னது போல் ரொம்ப பழைய கதைதான் என்றாலும் “ஒரு நல்லவனை நல்லவனாக நடிக்க வச்சிட்டீங்களே”, “சாதி இல்லனு சொல்றவன் என்ன சாதி என்று தேடாதீங்க”, “நான் ஜெயில்ல இருக்குறது தான் என் பொண்ணுக்கு சந்தோஷம்னா அவளுக்காக நான் அதையும் பண்ணுவேன்” என்பது போன்ற அழுத்தமான வசனங்களாலும்,, சென்டிமென்டான காட்சிகளாலும் ஸ்பீடான ஃபேமிலியுடன் பார்க்கத் தகுந்த  ஒரு படத்தைக் கொடுத்து அடடே சொல்ல வைத்து விட்டார் அறிமுக இயக்குநர் அந்தோனி பாக்கியராஜ்.

மொத்தத்தில் இந்த சைரன் – கோலிவுட்டைக் காக்க வந்த ஒலி!

மார்க் 4/5

 

 

error: Content is protected !!