June 1, 2023

‘ஷூட் த குருவி’ – விமர்சனம்!

பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாகவும், அதே சமயம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையோடு வந்துள்ளது ஷூட் த குருவி என்னும் குறும்படம்.. ஒருமணி நேரத்துக்கும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் இப்படம் SHORTFLIX தளத்தில் காணலாம்.

போலீஸ் டிப்பார்ட்மெண்டுக்கே சிம்ம சொப்பனமாக இருப்பதோடு, தன்னை பற்றிய தகவல்கள் வெளி உலகத்திற்கு முழுமையாக தெரியாமல் வாழ்ந்து வந்தவர் குருவி ராஜன். அவர் மிகச் சாதாராணமான இரண்டு பேரால் கொல்லப்படுவதோடு, அவனுடைய சாம்ராஜயமே சரிந்து விடுகிறது. யார் அந்த குருவி ராஜன்? அவனது சாம்ராஜ்யத்தை அழித்து அவனையும் அழித்த அந்த இரண்டு சாமனியர்கள் யார்?, அவர்கள் அதை எப்படி செய்தார்கள்? என்பதை சுவாரஸ்யமாக அதே சமயம் சுருக்கமாம சொல்லி இருப்பதே ‘ஷூட் தி குருவி’கதை.

ஏகப்பட்ட படங்களில் துக்கடா ரோல்களில் நடித்து வரும் அர்ஜை குருவி ராஜன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்திருக்கிறது. வழக்கம் போல் தனது பாணியில் வசனம் பேசி சிரிக்க வைத்திருக்கும் ஷாரா, கூடுதலாக அம்மா செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகர்களின் நண்பராக பல படங்களில் நடித்து வரும் ஆஷிக் ஹுசைன் கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார். மிக இயல்பாகவும் நடித்திருப்பவர் பல இடங்களில் ரியாக்‌ஷன்கள் மூலமாகவே சிரிக்க வைக்கிறார்.

பேராசிரியர் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்குமார்.ஜி வயதான வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். புத்த பிட்சு போல் வரும் சுரேஷ் சக்ரவர்த்தியுடன் மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

கேமராமேன்பிரண்டன் சுஷாந்த் ஒரு அறைக்குள் வைத்தே பெரும்பாலான படத்தை முடித்திருக்கிறார். எஞ்சிய காட்சிகளையும் வெவ்வேறு அறைகளில் படமாக்கி தன் சவாலை நிறைவேற்றி இருக்கிறார். மியூசிக் டைரக்டர் மூன்ராக்ஸ் பின்னணி இசையில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை விட ஒலி மிஞ்சி விடுகிறது

ஜஸ்ட் ஆறே நாளில் உருவாகி உள்ளதாம் இக்குறும்படம். ஆனாலும் படம் முழுக்க தேவையான டெம்போவை மெயின்டெய்ன் செய்திருக்கிறார் இயக்குனர். பார்வையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு திருப்பங்களும் திருப்பங்களும், நகைச்சுவையும் உள்ளன.