ஷூ பட விமர்சனம்!
நாளிதழ்களில் அன்றாடம் இடம் பிடிக்கும் செய்திகளில் ஒன்றான பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இதை மையமாக வைத்து சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்காக விற்கும் கும்பலை கருவாக கொண்ட படம். இப்படத்தை சரியாக யோசித்து எடுத்திருந்தால் உருப்படியான சினிமா பட்டியலில் இடம் பிடித்திருக்கும்.. ஆனால் ஏனோ தானோவென்று எடுத்துக் கொடுத்து பெயில் மார்க் வாங்கி விட்டார்கள்.
டைம் மெஷின் டைப்பில் ஒரு ஷூ ஒன்றை கண்டுபிடிக்கிறார் நாயகன்(?)திலீபன், அதனை சோதனை செய்யும் போது எதிர்பாராத விதமாக போலீசில் மாட்டிக் கொள்கிறார். இன்னோரு பக்கம் ஒரு கும்பல் பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்துகிறது, மறுபுறம் தாய் இல்லாத ஒரு குழந்தை குடிகார அப்பாவிடம் இருந்து கஷ்டப்படுகிறது. இவர்கள் மூன்று பேரையும் அந்த ஷூ ஒரு கட்டத்தில் இணைக்கிறது, பிறகு என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.
படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவில்லை. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அவருக்குத் துணையாக ரெடின் கிங்ஸ்லி, பாலா இருந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சமாகவே இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதெல்லாம் எப்படி நகைச்சுவையில் சேரும். . சிறுமி பிரியாவாக வரும் ப்ரியா கல்யாண், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு.
தன் அம்மாவின் புகைப்படத்தை காண காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து கடைசியில் ஏமாற்றம் அடையும்போது அந்த குழந்தையின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது, படம் முழுவதும் எதார்த்தமான நடிப்பையே கொடுத்திருந்தார். ஷூ தான் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இன்னும் சில காட்சிகளில் பயன்படுத்தி இருக்கலாம். சாம் சிஎஸ் இசையில் பின்னணி இசையும் அம்மா பாடலும் ரசிக்கும்படியாக இருந்தது
ஆனாலும் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதத்தில் திரைக்கதை அமைத்து சொதப்பி விட்டார் டைரக்டர்
மொத்தத்தில் ஷூ- பொருந்தவில்லை
மார்க் 2.25/5