செம்பி – விமர்சனம்!

செம்பி – விமர்சனம்!

ன்றைய சூழ்நிலையில் உலகிலேயே அதிகம் பாலியல் வன்முறைகள் நிகழும் நாடாக இந்தியா மாறியிருக்கின்றது. தேசிய குற்றப் பதிவு அமைப்பின் கணிப்பின் படி ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை பெண்கள் மீதான குற்றம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது என்பது தெரிய வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொடுமைகள், ஆணவக் கொலைகள், பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரங்கள், பாலியல் தொழில் தள்ளப்படுதல், கட்டாயத் திருமணங்கள், ஆசிட் வீசுதல், சிறார்கள் மீதான பாலியல் வன்முறைகள் என கட்டுக்கடங்காத வகையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கும் சூழலில் வழக்கமான பனி படர்ந்த மலை சாலை, பேருந்து, பயணிகள் என தனக்கான முத்திரைகளுடன் செம்பி என்றொரு படத்தைக் கொடுத்துள்ளார் டைரக்டர் பிரபு சாலமன். ட்ரிடென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கதை என்னவென்றால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆறாவது படிக்கும் நிலா என்ற பேர் கொண்ட தனது பேத்தியுடன் தேன், கனிகளை பறித்து சந்தையில் விற்று வாழ்க்கை ஓட்டி வருபவர் வீரத்தாய் (கோவை சரளா ) ஒரு நாள் காட்டில் பேத்தி தனியாக நடந்து செல்லும் போது எதிர் கட்சி தலைவரின் (நாஞ்சில் சம்பத்) மகனும், அவனது நண்பர்களுக்கும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து விடுகிறார்கள். பிரச்னையை போலீசிடம் சொன்னால் குற்றவாளிகளை பிடிக்க வேண்டிய போலீஸ் குற்றவாளிகளிடமே பண பேரம் பேசி, வீரத்தாயிடம் வழக்கை முடிக்க முயல்கிறார். இதில் ஆத்திரம் அடையும் பாட்டி வீரத்தாய் இன்ஸ்பெக்டரை பலமாக தாக்கி விட்டு ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்கிறார். அந்த.பேருந்தில் இருக்கும் வக்கீல் (அஸ்வின் குமார்) மற்றும் சக பயணிகளிடன் தன் பேத்திக்கு நடந்த அநீதியைச் சொன்னவுடன் ஆன் லைன் மூலமாகவே நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். இதை அடுத்து நடக்கும் போராட்டத்தைச் சில பல வலி மற்றும் வழிகளுடனும் சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன்.

சிரிப்பு நடிகையாக மட்டுமே திரையில் வந்த கோவை சரளாஇந்த செம்பியில் முழுசாக முகத்தோற்றத்தை மாற்றி, சுருக்கம் உள்ளிட்ட நுணுக்கங்களுடன் பழங்குடியின மக்களில் ஒருவராகவே காட்சி அளிக்கிறார் . இதுவரை நடித்ததிலேயே முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அனுபவம் வாய்ந்த தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த திரையையும் ஆக்கிரமித்து மிரட்டுகிறார். ஓரிடத்தில் அவர் உடைந்து அழும் காட்சியில் நம்மையும் கலங்கச் செய்து முத்திரைப் பதிக்கிறார்.இப்படத்தின் மூலம் அரசு விருது எதிர்பார்க்கலாம்

செம்பியாக நடித்திருக்கும் சிறுமி நிலா, நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். குறிப்பாக குற்றவாளிகளைக் கண்டு நடுங்கும் காட்சியும், கிளைமாக்ஸின் நடிப்பும் திரைத் துறையில் அவருக்கான எதிர்கால இடத்தை உறுதி செய்கிறது. அஸ்வின் தனக்கான கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் நடிப்பை வழங்கி இருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஞான சம்பந்தன் உள்ளிட்டோர் துணைக் கதாபாத்திரங்களுகளில் வலு சேர்க்கின்றனர்.

மலைக்கிராமம், புல்வெளி, அருவி, பனிமூட்டம், அதற்கு நடுவே இருக்கும் பனித்துளிகள் என ஒரு விஷுவல் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் கேமராமேன் ஜீவன். பொதுவாக பிரபு சாலமன் படங்கள் என்றாலே மலையும், அது சார்ந்த பகுதிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்படும். இந்தப் படத்திலும் அவை சிறப்பாக வெளிப்பட்டு பார்ப்பவர்களுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அது கதைக்கும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை கரைசேர்க்க உதவியிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் இனிமையாகவும் பின்னணி இசை பல இடங்களில் நம்மை உருகவும் வைத்திருக்கின்றன. ஒரு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரபு சாலமன் படங்களில் இசை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

ஆனால் எடுத்துக் கொண்ட கதையோட்டத்தின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து லாஜிக் மீறல்காள்… மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸில் இருருந்து இன்னொரு பஸ்சூக்கு தாவிச் செல்வதும், காலி பஸ்ஸை வில்லன்கள் முட்டித் தள்ளுவதும்,படத்தின் ஆதார நம்பகத் தன்மையை சிதறடித்து விடுகிறது ,மேலும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் நீதிபதி தீர்ப்பு வழங்குவதும், இந்த பிரச்சனை பூகம்பமாக தமிழகம் முழுக்க பரவிக் கொண்டிருக்க ஆளுங்கட்சி தலைவர் பழ கருப்பையா அதை பொருட்டாகவே கருதாமல் இருப்பதெல்லாம், ரொம்ப ஓவர். அத்துடன், பஸ்ஸில் சகலரும் சதா பேசிக்கொண்டே காட்சிகளை நகர்த்தியிருப்பது சலிப்படைய வைத்து விட்டது.

இதையெல்லாம் கடந்து கொடைக்கானல் அழகைக் காணவாவது இப்படத்தை ஒரு தடவைப் பார்க்கலாம்

மார்க் 3/5

Related Posts