இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடையா?: ராஜபக்ஷே அரசு குழப்பம் !

இலங்கையின் சுதந்திர தின விழாவில் இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் இது நாள் தமிழில் பாடியது உடனடியாக நிறுத்தப்ப்படும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார் என்று தகவல் ஒரு பக்கம் வெளியாகியுள்ளது. அதே சமயம் இத்தகவல் உண்மையில்லை என்றும் செய்தி வருகிறது.
நம்ம நாட்டின் வங்காள மொழிக் கவிஞரும் சுதந்திரப் போராட்ட விரருமான ரவீந்திரநாத் தாகூர் கடந்த 1937 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இலங்கையின் அழகில் மயங்கிய தாகூர், ‘ஸ்ரீலங்கா மாதா’ என்ற வங்க மொழிப் பாடலை இயற்றினார். பின்னாளில் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் கல்வி கற்ற இலங்கை கவிஞரான ஆனந்த சமரக்கூன் ஸ்ரீலங்கா மாதா பாடலை சிங்கள மொழியில் மொழி பெயர்த்தார். பின்னர் இலங்கைக்கு ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்ததும் இந்தப் பாடலே இலங்கையின் தேசிய கீதமும் ஆனது.
அதை அடுத்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சார்ந்த தமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி என்பவர் இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார். 04.02.1949 முதல், சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் பின்னர் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியை யடுத்து அதிபராகப் பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா, ”இலங்கையில் சிங்கள மொழிக்கும், பவுத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் உண்டு. இதை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் போதும், அரசு நிகழ்ச்சிகளிலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும்” என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 1949-ம் ஆண்டுக்குப் பிறகு 67 ஆண்டுகள் கழித்து இலங்கையின் 68-வது சுதந்திர தின விழா 04.02.2016 அன்று நடைபெற்றபோது சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. உள்நாட்டு யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை நீண்ட காலமாகவே புறக்கணித்து வந்த நிலையில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் வகையில் அமைந்ததாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 18 அன்று இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிர்வாக ரீதியாக முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றம் செய்து வருகின்றார். இலங்கையின் 72-வது சுதந்திர தினம் எதிர்வரும் 04.02.2020 அன்று கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சயில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடுவதற்கு கோத்தபய அரசு தீர்மானித்துள்ளது.
தற்போதுதேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.
அதே சமயம் இது குறித்து நாம் விசாரித்த போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவினை பதிவேற்றிருந்தது காணக்கிடைத்தது. அது குறித்த பதிவில் தமிழில் தேசிய கீதம் பாடுவது தடை என புதிய ஜனாதிபதியால் எந்த பணிப்புரையும் விடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார எம்பி தெரிவித்ததாக மனோ கனேசன் பதிவிட்டிருந்தார்.
மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு தொடர்பு கொண்டு வினவியபோது, இது குறித்த விஷயம் போலியானது என தெரிவித்திருந்தனர். மேலும் புதிய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ச அவரது உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களில் நேற்று ஒரு பதிவினை பதிவிட்டார்.
அதில்,”தற்போது சமூக ஊடகங்களில், என்னால் அறிவிக்கப்பட்ட ”அரச தீர்மானங்கள்” என்ற பெயரில், பல தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.எனது எந்தவொரு முடிவு தொடர்பான அறிவிப்பும் ஜனாதிபதி செயலகத்தின் முத்திரை பொறிக்கப்படடு,ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அல்லது எனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களின் ஊடாக மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
ஆக கிடைத்த தகவல் அடிப்படையில் தேசியகீதம் இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே – ஜனாதிபதியின் உத்தரவு என கூறப்படும் செய்தி போலியானது என்றும் தகவல் வருகிறது