June 7, 2023

வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு செல்லாது என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

ல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டத்தை இயற்றி அரசாணை வெளியிட்டது. அதாவது தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் சீர்மரபினருக்கு மொத்தமாக 20 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதில் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்டம் இயற்றியது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த இட ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள ஏராளமான சமூகங்கள் பாதிக்கப்படும் எனவும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும், இந்த சட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த ஐகோர்ட் உயர் நீதிமன்றம், வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட சட்டத்துக்கு ஆதரவாக தமிழக அரசும், பாமகவும் தொடர்ந்து தங்கள் வாதங்களை முன்வைத்து வந்தன. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்ழக்கை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23-ம் தேதி ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்ட ஐகோர்ட் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தங்கள் தீர்ப்பில், ‘”குறிப்பிட்ட சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம். அதுபோன்ற வலுவான காரணங்கள் தெரிவிக்கப்படாததால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது செல்லும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.