ஹஜ் பயணம் : 10 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி- சவுதி அரேபியா அரசு அறிவிப்பு!

ஹஜ் பயணம் : 10 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி- சவுதி அரேபியா அரசு அறிவிப்பு!

க்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெரு நாள் எனவும் அழைக்கப்படுகிறது. இஸ்லாம் மார்க்கத்தின் புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.

ஹஜ் புனித யாத்திரைக்காக இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் பலரும் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன்பு வரை ஒவ்வொரு வருடமும் உலகமெங்கிலும் இருந்து சுமார் 25 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த சில ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டுமே ஹஜ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 10 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி அளிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா மற்றும் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும் என்று சவுதி அரேபியா கூறியுள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து வரும் யாத்ரீகர்கள் கொரோனா எதிர்மறை பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் சில கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!