கோவை 7 வயது சிறுமி பாலியல் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை + தூக்கு!!
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக 302 பிரிவின் கீழ், தூக்கு தண்டனையும், தடயங்களை அழித்ததற்காக 201 பிரிவின் கீழ், 7 ஆண்டுகள் சிறையும் தண்டனை வழங்கி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 18 ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்ட போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 1 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அதன்பின்னர் பலமணி தேடியபின்னர் மறுநாள் காலையில் வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
இது தொடர்பாக துடியலூர் போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமியின் வீட்டிற்கு எதிரே வசித்து வந்த தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை மார்ச் 31-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த 19-ஆம் ஆம் தேதி முடிவடைந்து, 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை வதித்து போக்ஸோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக இவ்வழக்கில் இன்று காலை குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்ட சந்தோஷ்குமாருக்கு தற்போது மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக 302 பிரிவின் கீழ், தூக்கு தண்டனையும், தடயங்களை அழித்ததற்காக 201 பிரிவின் கீழ், 7 ஆண்டுகள் சிறையும் தண்டனை வழங்கி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே உயிரிழந்த சிறுமியின் தாயார், மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்தோஷ்குமாரைத் தவிர்த்து மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ. கலப்பு உள்ளது. கடந்த மாதமே இந்த அறிக்கை வந்த போது புலன் விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தான் முன்பே கூறியதுபோல கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு வாய்ப்புள்ளதால், மீண்டும் இந்த வழக்கை பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிறுமியின் தாய் கோரிக்கையை ஏற்று மறுவிசாரணைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.