500 & 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

500 & 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! -பிரதமர் மோடி  அதிரடி அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி. ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.

modi nov 9

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

மேலும் வறுமையை ஒழிப்பதே தமது அரசின் குறிக்கோள் என்றும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி அளித்து வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு கொடுக்க எதிரிகள் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாகவும், பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். தவறுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என மோடி தெரிவித்தார்.

இதையடுத்து  இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என   அறிவித்தார்.. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது எனவும் நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்  இதோ::

* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம்.

* டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் டிக்ளரேஷன் ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம்.

* நாடு முழுதும் ஏடிஎம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் செயல்படாது.

* பெட்ரோல் நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், சர்வதேச விமான நிலையங்கள், ரயில் டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை பயன்படுத்தலாம்.

* சில நாட்களுக்கு ஏடிம்-லிருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. இது பிற்பாடு ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும்.வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும்.

* இண்டெர் நெட் பேங்கிங், பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.

* நாளை (நவ.9) வங்கிகள் செயல்படாது.

* புதிய ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் புழக்கத்திற்கு வரும்.

மேலும் இந்த மாற்றம் குறித்து இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இந்தியா நேர்மையான, ஊழலற்ற நாடாக விளங்குவதற்காக அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி 10-ந் தேதி (நாளை) முதல் இவைகளை வெளியிடுகிறது. இந்த நடவடிக்கை நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும்.

உங்களை வேறு யாரும் கள்ளத்தனமான பணத்தை மாற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள். இரவுக்கு பின்னர் ஒருவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவது அவர்களது பொறுப்பு தான். புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை படமும், புதிய 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும். கண் பார்வையற்றவர்களும் இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் அடையாள குறியீடுகள் இருக்கும்”இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாற்றங்களின் மூலம் இந்தியாவில் 1,000 ரூபாய் நோட்டுகள் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!