ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள்!- சுப்ரீம் கோர்ட்

நம் நாட்டில் அடைக்கலமான ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. குறிப்பாக உரிய நடைமுறைகள் பின்பற்றி, அவர்களை நாடு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஜம்முவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகளீடம் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து வெடித்த வன்முறையில், லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். ரோஹிங்க்யா முஸ்லிகள் வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலர் ஜம்மு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்கவும் அவர்களுக்கு விரைவாக அகதிகள் அடையாள அட்டைகளை வழங்கவும் மாநில அரசுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த முகமது சலீமுல்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது சார்பாக வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் மற்றும் செரில் டிசோசா இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஷரத் ஏ. போப்டே தலைமையிலான அமர்வு காவலில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்கும் முகமது சலீமுல்லாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என தெரிவித்தனர். அதேசமயம் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை ஜம்முவில் உள்ள ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.
“மியான்மரில் நடந்த இனப்படுகொலையை கண்டிக்கவோ அல்லது இரங்கல் தெரிவிக்கவோ நாங்கள் எந்த வகையிலும் அழைக்கப்படவில்லை. எங்கு இனப்படுகொலை நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தலைமை நீதிபதி போப்டே வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிடம் தெரிவித்தார்