ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்!

ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்!

டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்றைய நாள் சோகமயாக இருக்கக்கூடும். காரணம், ஃபெடரரின் ஓய்வு அறிவிப்புக்குப் பின்னர் கடைசி ஆட்டத்தில் அவர் தோற்று போனதை நினைத்தும் கவலை கொள்வார்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக டென்னிஸ் எனும் விளையாட்டை பிரியமாக காண தொடங்கியவர்களுக்கு ஃபெடரராலேயே அந்த விளையாட்டின்மீது அதீத ஆசை உண்டாகியிருக்கும். அந்தளவிற்கு டெடிகேட்டிவ் பிளேயரவர்.

ஆனால் சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், க்ராண்ட்ஸ்லாம்களில் மட்டும் மொத்தம் 31 இறுதிப்போட்டிகளில் ஆடியிருக்கும் ஃபெடரர் 20 முறை வெற்றிவாகை சூடியிருக்கிறார். முதல் முதலில் 20 க்ராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரரும் ஃபெடரரே. விம்பிள்டனின் புல்தரைதான் ஃபெடரருக்கு ஃபேவ்ரட். விம்பிள்டனை மட்டுமே 8 முறை வென்றிருக்கிறார். 2003 முதல் 2007 வரையில் தொடர்ச்சியாக 5 முறை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் விம்பிள்டன் தொடரை வென்றிருந்தார்.
விம்பிள்டனை போன்றே அமெரிக்க ஓபனையும் 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 முறை வென்றிருக்கிறார். இதுபோக ஆஸ்திரேலிய ஓபனை 6 முறையும் ஃப்ரெஞ்ச் ஓபனை ஒரே ஒரு முறையும் வென்றிருக்கிறார்.

24 வருட கரியரில் எல்லாவிதமான போட்டிகளையும் சேர்த்து 1526 போட்டிகளில் ஆடியிருக்கும் ஃபெடரர் 1251 போட்டிகளில் வென்றிருக்கிறார். 2006-07 காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 41 போட்டிகளில் தோல்வியையே தழுவாமல் ஆடியிருந்தார். டென்னிஸ் கோர்ட்டில் ஃபெடரரின் ஆதிக்கத்தை நிரூபிக்கக்கூடிய புள்ளிவிவரம் இது. அதேமாதிரி, 2004 முதல் 2008 வரைக்கும் தொடர்ச்சியாக 237 வாரங்களுக்கு தரவரிசையில் நம்பர் 1 வீரராகவே இருந்தார். இந்த சாதனையையும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. 36 வயதில் மீண்டும் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். நம்பர் 1 இடத்தை பிடித்த வயதான வீரர் எனும் பெருமையும் ஃபெடரருடையதே.2006, 2007, 2009 இந்த மூன்று ஆண்டுகளிலும் நடைபெற்ற அத்தனை க்ராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

அப்பேர்பட்டவர் அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் ரோஜர் பெடரர் அறிவித்திருந்தார். முதுகு காயம் அபாயகரமான நிலையில் இருப்பதால் டென்னிஸிலிருந்து விலக முடிவெடுத்தார் ரோஜர் பெடரர், ‘என் வாழ்க்கையை மேலும் அறுவைசிகிச்சைகள் இல்லாமல் வாழ விரும்புகிறேன்’ என்று ரோஜர் பெடரர் லேவர் கோப்பைக்கு முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அறிவித்தப்படி அவர் பங்கேற்கும் கடைசி தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடரை லண்டனில் நேற்று ஆடினார். இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் இணையுடன் மோதினார்.

இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ – ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.

ரோஜர் பெடரர் கூறும்போது, “இது ஒரு அற்புதமான நாள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது, கடைசியாக எல்லாவற்றையும் செய்து மகிழ்ந்தேன்” என்று தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!