ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுகும்’ இசை நிகழ்ச்சி: சென்னைக்கு ஒரு பிரம்மாண்டமான அனுபவம்!

ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுகும்’ இசை நிகழ்ச்சி: சென்னைக்கு ஒரு பிரம்மாண்டமான அனுபவம்!

பான் இந்திய இசையமைப்பாளரும், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்ட ‘ராக்ஸ்டார்’ அனிருத், சென்னை ரசிகர்களுக்கு ஒரு முன்னெப்போதும் கண்டிராத இசை அனுபவத்தை வழங்கத் தயாராகிவிட்டார். ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, தனது உலகளாவிய #Hukum இசைப் பயணத்தின் இறுதி நிகழ்ச்சி, சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று, கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி (MARG SWARNABHOOMI) எனும் பிரம்மாண்டமான இடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனிருத் தனது சமூக வலைத்தளங்களில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதோடு, டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.

பிரம்மாண்ட ஏற்பாடுகள் மற்றும் வசதிகள்:

பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்கள் திரளப் போவதால், அவர்களது பாதுகாப்பு, வாகன நிறுத்துமிட வசதி (பார்க்கிங்) மற்றும் பிற வசதிகள் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். குறிப்பாக, ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் வகையில் விசாலமான பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம், ரசிகர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு இசை நிகழ்ச்சியிலும் இல்லாத அளவுக்கு பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்து வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதியளிக்கின்றனர். இது இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

டிக்கெட் முன்பதிவு விவரங்கள்:

இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை, District எனும் பிரத்யேக ஆப் (App)பில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்றிலிருந்தே தொடங்கியுள்ளது. விரைந்து உங்கள் டிக்கெட்டுகளைப் பதிவு செய்து, இந்த மறக்க முடியாத இசை அனுபவத்தின் ஒரு பகுதியாகுங்கள்!

#Hukum – ஒரு உலகளாவிய வெற்றிப் பயணம்:

‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் #Hukum இசை நிகழ்ச்சிகள் பல உலக நாடுகளில் நடைபெற்று பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது அதன் இறுதி அத்தியாயம் சென்னையில் அரங்கேறுவதால், இதனை ஒரு மிகப்பெரிய வெற்றி நிகழ்வாக மாற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அனிருத்தின் இணையற்ற இசை, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரம், பிரம்மாண்டமான ஏற்பாடுகள், மற்றும் ஒப்பற்ற இசை அனுபவம் ஆகியவை ஒன்றிணைவதால், இந்த #Hukum நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகஸ்ட் 23 அன்று, மார்க் சொர்ணபூமியில், ‘ராக்ஸ்டார்’ அனிருத்துடன் இணைந்து இசைப் பயணத்தின் உச்சத்தைத் தொட தயாராகுங்கள்!