கடும் வெயிலால் ஏற்படும் ரேப்டோ மயோலைசிஸ் எனும் தீவிரத் தசைச் சிதைவு நோய்!

அதீத வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து நீண்ட நேரம் கடினமான பணியைச் செய்யும் போது ,தசைகள் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும், அச்சமயம் ஓரளவுக்கு மேல் தாங்கும் சக்தியை இழந்து சிதைவுக்கு உள்ளதாகத் தொடங்கி விடுகின்றன. அப்போது தன்னகத்தே கொண்ட பொட்டாசியம், பாஸ்பேட்,க்ரியாடினின் கைனேஸ்,மயோகுளோபின்,யூரிக் ஆசிட் ஆகிய பொருட்களை மிக அதிக அளவில் ரத்தத்தில் கலந்து விடும். இத்தகைய நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பணியை நமது சிறுநீரகங்கள் செய்ய வேண்டும். ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் வெப்பமான சூழ்நிலையில் இருந்தமையால் அதீத நீர்ச்சத்து இழப்பு நிலையின் விளைவாக சிறுநீரகங்கள் தொய்வாகவே அதன் பணியைச் செய்யும். கூடவே ஒரே நேரத்தில் மிக அதிகமான அளவில் நச்சுப் பொருட்களை சுத்தீகரிக்க வேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்ய உந்தப்படும் போது அவையும் அயர்ச்சிக்கு உள்ளாகி தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யத் துவங்கி விடும்.
இதன் பொருட்டு ரேப்டோமயோலைசிஸ் – மருத்துவ அவசர நிலையாக உருமாறும். அதாவது
– அதீத தசை வலி
– தசைகளில் வீக்கம்
– தசைத் தளர்ச்சி
– சிறுநீர் நிறம் அடர்த்தியாக செல்வது
( தேநீரின் நிறம் முதல் ரத்த நிறத்தில் செல்வது) ஆகியவை அறிகுறிகள் ஏற்படும். இதை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து க்ரியாடினின் கைனேஸ் அளவுகளைச் சோதித்து ரேப்டோமயோலைசிஸ் உறுதி செய்யப்பட்டு அவசர சிகிச்சை ஆரம்பமாகும். ரத்த நாளம் வழி திரவங்களும்,தாதுஉப்புகளையும் ஏற்ற வேண்டும். சிறுநீரகம் செயல்பட மறுத்தால் டயாலசிஸ் எனும் ரத்த சுத்தீகரிப்பு சிகிச்சை செய்து நச்சுப் பொருட்களை வெளியேற்றி சிறுநீரகங்களுக்கு சற்று ஓய்வு அளிக்க வேண்டும்.
ரேப்டோமயோலைசிஸ்- விபத்துகளால் ஏற்படும் காயங்கள் / தீக்காயங்கள் ஆகியவற்றால் ஏற்படலாம். சிறுகச் சிறுக உடல் தசைகளுக்கான ஒர்க் அவுட்களைக் கூட்டிக் கொண்டே செல்லாமல் திடீரென அதிரடியாக அதீத பளுவை தசைகளுக்கு ஒர்க் அவுட் மூலம் கொடுத்தாலும் ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். நீண்ட தூரம் ஓடுபவர்களும், தங்களது நீர்ச்சத்து மற்றும் தாது உப்பு அளவுகளை பராமரிக்காமல் தசைகளுக்குத் தேவையான மீளும் காலத்தை வழங்காமல் தொடர் சிரத்தைக்கு உள்ளாக்கினால் ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம்.
சில விஷப்பாம்புக் கடிகளில் தசைச் சிதைவு ஏற்படுவதைக் காண்கிறோம். மனநோய் சிகிச்சை மருந்துகள், ஸ்டாட்டின் எனும் கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரை உட்கொள்ளும் நீரிழிவு நோயர்கள் மற்றும் கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு அரிதிலும் அரிதாக ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். கவனம் தேவை. மது அருந்துபவர்கள், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதை வஸ்துக்களை உபயோகப்படுத்துபவர்களுக்கு அதீத வெப்பத்தால் நீர்ச்சத்து குறைவு ஏற்படும் போது ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். முதியோரும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
எப்படி தற்காத்துக் கொள்வது?
காயங்கள் குறிப்பாக பெரிய அளவில் தீக்காயம் அடைந்தவர்கள் – அதற்குப் பிறகு சில நாட்கள் இந்த ரேப்டோமயோலைசிஸ் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெப்பம் அதிகமாக நிலவும் சூழ்நிலையில் தசைகளுக்கு தொடர்ந்து அதிக நேரம் ரெக்கவரி நேரம் இல்லாமல் வொர்க் அவுட் / நீண்ட நேரம் ஓடுவது / சைக்ளிங் செய்வதை தவிர்க்கலாம். முறையாக நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகளை பராமரித்து வருவது நல்லது.வெயிலில் கடினமான வேலைகள் செய்பவர்கள் கட்டாயம் அவ்வப்போது நிழலில் ஓய்வு எடுப்பதையும் நீர் அருந்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.ரேப்டோமயோலைசிஸ் அரிதானது எனினும் ஏற்படும் போது உயிருக்கு ஆபத்தான அவசர நிலையாகும்.
– அதீத தசை வலி
– தசை வீக்கம்
– சிறுநீர் ரத்தம் போல சிவப்பாகச் செல்லுதல் ஆகிய
அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.
உச்சி வெயில் நேரமான நண்பகல் 12 முதல் 3 மணி வரை பணியாளர்களுக்கு நிழலில் தங்கி கட்டாய ஓய்வெடுக்கும் நடைமுறையைக் கொண்டு வருவதன் மூலம் வெயில் வெப்பத்தினால் ஏற்படும் மரணங்களைத் தடுத்திட முடியும் என்று நம்புகிறேன்.