June 7, 2023

‘சர்வம் தாள மயம்’ – விமர்சனம்!

நம் நாட்டின் பாரம்பரிய இசையில் இரண்டு அடிப்படையான வகைகள் உள்ளன. கர்நாடக சங்கீதம் – தென்னிந்தியாவை சேர்ந்தது, ஹிந்துஸ்தானி சங்கீதம் – வடஇந்தியாவை சேர்ந்தது. ஒலியை அதிகமாக கொண்டுள்ளது ஹிந்துஸ்தானி சங்கீதம்; கர்நாடக சங்கீதம் உணர்வுகளை அடிப்படை யாக கொண்டது. அதே சமயம் இந்த கர்நாடக சங்கீதம் என்பது ஏதோ பிராமணர்களுக்கு உரிய இசை என்றாகி விட்டது. மற்றவர்களுக்கு இது வராது. பிராமணர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள். இதனால் இது அவர்களுக்கு ஒரு வரமாக அளிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அதை அண்ட வேண்டாம் என்றெல்லாம் சில பல ஆண்டுகளாக ஒரு வித மாயை பரவி வந்த நிலையில் அதை தகர்தெறியும் நோக்கில் தயாராகி ரிலீஸாகி இருக்கிறது ‘சர்வம் தாள மயம்’.

இன்றைய இளைஞர்களின் வெகுவானவர்களுக்குப் பிடித்த நடிகர் விஜய் ரசிகராக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஒடுக்கப் பட்ட இளைஞன் பீட்டர் (ஜி.வி. பிரகாஷ் ). அவருடைய அப்பா ஜான்சன்( குமாரவேல்) மிருதங்கம் தயாரித்துக் கொடுக்கும் பணி செய்து வருகிறார். அதே மிருதங்கம் வாசிப்பதில் சர்வதேசப் புகழ் பெற்றவர் நெடுமுடிவேணு, அவருடைய உதவியாளர் வினித் உடன், ஒரு கச்சேரிக்கு கிளம்புகிறார். அச்சமயம் வினித் திடீரென கையிலிருந்த மிருதங்கத்தை கீழே போட்டு, அது தாளம் தப்ப வாய்ப்பு இருக்கிறது என்று கருதி, புதியதாக வேறு மிருதங்கம் ஒன்றை ஜான்சனிடம் கேட்கிறார்.

ஜான்சன், பீட்டரிடம் மிருதங்கத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறார். போன இடத்தில் அந்த கச்சேரியில் நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதையும், அதற்கு மக்கள் அளிக்கும் பாராட்டு களையும் கண்டு பிரமிக்கும் பீட்டர், தான் ஒரு பிரபல் மிருதங்க சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்று ஆசைக் கொள்கிறார்.

இதற்காக நெடுமுடி வீட்டுக்கு கிளம்புகிறான். அங்கே பீட்டர் மறுக்கப்படுகிறான். அதையும் மீறி நெடுமுடியின் அன்பைப் பெற்று, அவரிடம் தாளம் கற்றுக்கொள்கிறான். ஆனால், உதவியாளர் வினித்க்கும் பீட்டருக்கும் முட்டிக்கொள்கிறது. நெடுமுடி வேணுவால் வினித் வெளியே அனுப்பப் படுகிறார். வினித் பீட்டரை பழிவாங்க என்ன திட்டம் தீட்டுகிறார். அதிலிருந்து பீட்டர் தப்பியது எப்படி? என்பதை ஒரு நீண்ட ஸ்வரமாய் காட்டி இருக்கிறார்கள்.

அஜித்தை வைத்து கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தை கொடுத்த ராஜிவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் வந்திருக்கிறார். வந்தவர் இணைய உலகில் மட்டுமே சர்ச்சையாகி கொண்டிருக்கும் இசைக் கலைஞர்களின் வாழ்வியல் மற்றும்.ஆசா பாசங்களை வைத்து தமிழுக்குத் தகுந்தார் போல் கதை சொல்லியிருக்கிறார். குறிப்பாக இசை அனைவருக்கும் பொதுவானது என்று சொல்ல வந்த ராஜீவ் மேனன் அதை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம்,

ஜி.வி.பிரகாஷ் நாச்சியார் படம் மாதிரி இதிலும் தன் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு நடிக்க முயன்றுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். இவருக்கு இது 9-வது படமாம். ஆனால் முகத்தில் பாவனைகளுக்கு பஞ்சம் காட்டுகிறார்.. சில பல இடங்களில் இன்னும் ஹோம் ஒர்க் செய்து விட்டு நடித்திருக்கலாம் என்று பக்கத்து சீட்டு பெரிசு சலிப்புடன் சொல்லும் குரல் ஜிவி பிரகாஷ் காதில் விழுந்தால் நல்லது

நெடுமுடி வேணு நம்ம சிவாஜி கணேசன் ஆவி ரெஞ்சில் அசத்தியுள்ளார். ஒரு நிஜ வித்வான் போலவே தன்னை வெளிப் படுத்தி யுள்ளார். இளங்கோ குமரவேல் வழக்கத்தைக் காட்டிலும் பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கிறார். வழக்கத்தைக் காட்டிலும் நேர்த்தியான, நுட்பமான நடிப்பில் இளங்கோ குமரவேல் மிளிர்கிறார்.

ரவி யாதவின் ஒளிப்பதிவு பிரமாதம்.

படத்தின் நிஜ நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான்.. அபாரம்.. ஆனாலும் படம் முடிந்து வெளியே வரும் போது பாடல் எதையும் ஹம் பண்ண தோணவில்லை என்பது சோகம்தான்.

ஓர் இசைக் கலைஞனின் படம்தான். இதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே வேறேதோ சில சினிமாக்கள் நினைவுக்கு வருவதும் உண்மைதான்.ஆனால்  சகல தரப்பினரும் பார்க்கும்படி செய்திருப்பதில் தாள மயம் டீம் ஜெயித்திருக்கிறது!

மார்க் 3 / 5