‘பானி பூரி’ -வெப் சீரிஸ் விமர்சனம்!

‘பானி பூரி’ -வெப் சீரிஸ் விமர்சனம்!

வீனமயமாகிப் போய் கொண்டிருக்கும் கால மாற்றத்தால் காலம் காலமாய் வாழும் காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பெரிதும் மாறிக் கொண்டிருக்கிறது. 90-களின் மத்தியில் காதலை வெளிப்படுத்தக் கூட தயங்கிய இளைய சமூகம் இன்று மேற்கத்திய கலாசாரமான ‘டேட்டிங்’, ‘லிவிங் டுகெதர்’ வரை வந்து விட்டது என்றால் அது நவீன மாற்றமா அல்லது கலாசார சீரழிவா? என பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு சமூக சூழல் மாறிப் போயுள்ள சூழலில் தாய், தந்தை அனுமதியோடு ஒரு லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை மையப்படுத்தி ஒரு முழுமையான இணையத் தொடரை கண்ணியமாகவும், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு தொடராகவும் கொடுக்க முடியும் என்பதை இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இத்தொடரின் மூலம் நிரூபித்திருக்கிறார். ஆனால் பல நேரங்களில் விசு மற்றும் எஸ்.வி.சேகர் நாடகத்தை நினைவுப்படுத்துவதுதான் சோகம்.

இந்த எட்டு எபிசோட் கொண்ட தொடரின் கதை என்னவென்றால் ஹீரோ லிங்கா என்ற பெயரான தாண்டாயுத பாணி யில் இருக்கும் பானியையும், ஹீரோயின் சாம்பிகாவின் பெயரான பூர்ணிமாவின் பெயரில் இருந்து பூரியையும் எடுத்து பானி பூரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பூரி (சாம்பிகா) சென்னையில் இருக்கும் ரோபோக்ட்டிஸ் துறையில் விஞ்ஞானியாக இருக்கிறார். கோவையில் இருக்கும் பானியும் (லிங்கா ) பூரியும் காதலர்கள். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கும் போது காதல் என்பது வேறு திருமணம் என்பது வேறு, திருமணதிற்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வீட்டில் இருவரும் ஏழு நாட்கள் லிவிங் டு கெதர் ஸ்டைலில் தங்க முடிவு செய்து ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் தங்குகிறார்கள். அந்த அப்பார்ட்மெண்ட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதன் முடிவு என்ன என்பதே பானி பூரி

நாயகன் லிங்கா,. காதலிக்கும் போது எதற்கும் கவலைப்படாத ஜாலியான இளைஞராக நடித்திருப்பவர், தனது காதலி எதிர்ப்பார்க்கும் சிறிய விஷயத்தில் வழக்கமான ஆண்களின் மனநிலையோடு யோசிக்கும் காட்சியில் அட்டகாசமாக நடித்து அடடே சொல்ல வைக்கிறார். ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி ஜம்பிகாவின் நடிப்பு ரோபோ மாதிரி எடுபடாமல் இருக்கிறது. நாயகியின் அப்பா ரோலில் நடித்திருக்கும் இளங்கோ குமரவேல், தன் இருப்பை மிகச் சரியாக பொருத்தி பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். நாயகனின் ஃப்ரண்டாக வரும் வினோத் சாகர், வரும் ஆரம்பத்தில் காமெடி ரோலாக இருந்து பின்னால் வந்த காட்சிகளின் மூலம் குணச்சித்திர நடிகராக ஸ்கோர் செய்து விடுகிறார்.

கேமராமேன் பிரவீன் பாலு, கதை முழுவதையும் கட்டிடங்களுக்குள் வைத்தே காட்சிப்படுத்த வேண்டியதில் சிரமப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வித்தியாசமான முயற்சியாக இசையமைத்திருக்கும் இவருடைய வித்தியாசமான பணி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு நூலிழை பிசகினாலும் ஒட்டு மொத்தக் கதையும் ஆபாசம் என்றாகி விடும் சப்ஜெக்டில் கொஞ்சமும் விரசம் இல்லாமல் காதல் காட்சிகள் மற்றும் காதல் வசனங்கள் என அனைத்தையும் மிக நாகரீகமாக கையாண்டிருக்கும்பாலாஜி வேணுகோபால், அழகு என்பது உருவம் சார்ந்தது அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும், மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அத்துடன் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்து வரும் ஒற்றை பெற்றோர் (single parent) கலாச்சாரம் பற்றியும் மாறி வரும் நவீன கார்ப்பரேட் கலாச்சாரத்தின் விளைவாக, மிடில் கிளாஸ் ஃபேமிலிகளில் அதிகரித்து வரும் விவாகரத்தின் காரணங்களையும் எக்ஸ்போஸ் செய்ய. ஒரு இயல்பான சம கால காதலர்களை உலாவ விட்டு சகலருக்கும் உணர்த்தி இருப்பதில் தனிக் கவனம் பெறுகிறார்..

ஆனாலும் திரைக்கதையில் நாடக பாணியைக் கொஞ்சம் மாற்றி இருக்கலாம்.கூடவே இது போன்ற தொடர்களை முழுவதுமாக பார்க்க வற்புறுத்தியதையும் தவிர்த்திருக்கலாம்.

இத்தொடர், ஷார்ட்பிளிக்ஸ் (ShortFlix) ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.எட்டு பாகங்களைக் கொண்டிருக்கிறது

error: Content is protected !!