கர்நாடகா கோர்ட்டில் அம்பேத்கர் படத்தை அகற்றிய நீதிபதி: பதவி நீக்கக் கோரி போராட்டம்!
கர்நாடக மாநிலத்தில் குடியரசு தின நிகழ்ச்சியில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற கோரிய மாவட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி, பெங்களுருவில் தலித் அமைப்பினர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ராய்ச்சூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், தேசிய கொடியை ஏற்றும் முன்பு அங்கு இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை எடுக்குமாறு மாவட்ட நீதிபதி மல்லிகா அர்ஜுனா கவுடா உத்தரவிட்டார். இதனை பார்த்த வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இப்பிரச்சினை ராய்ச்சூர் மாவட்டம் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களிலும் பரவியது. நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி தலித் இயக்கங்கள் ஓர் அணியில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக பெங்களுருவில் நேற்று நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். நீல கொடியை ஏந்தி சென்ற அவர்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேரணியில் சென்றவர்கள் ராய்ச்சூர் மாவட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி முழக்கங்களும் எழுப்பினர். பேரணியின் இறுதியில், சுதந்திர பூங்காவில் திரண்ட தலித் அமைப்பினர் மத்தியில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ராய்ச்சூர் மாவட்ட நீதிபதி செயல்பாடு குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடப்படும் என்று உறுதி அளித்தார். இப்பிரச்னையில் அரசியல் அமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.