சபரிமலை போக வந்த பெண் மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் – வீடியோ!!

சபரிமலை போக வந்த பெண் மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் – வீடியோ!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் உட்பட 7 பேர் கொண்ட குழு கேரளா வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்‍கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ள திருப்தி தேசாய், அரசு பாதுகாப்பு அளிக்‍க மறுத்தாலும் சபரிமலைக்கு சென்றே தீருவோம் என திட்டவட்டமாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்கக்கோரி, கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில், திருப்தி தேசாய், பிந்து உள்ளிட்டோர் மனு அளிக்‍க வந்தனர். அப்போது சபரி மலைக்கு பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர், திடீரென பிந்து மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினார். பின்னர் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது இளம் பெண்களும் தரிசனத்துக்கு  செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து இளம் பெண்கள் சபரிமலை செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கேரள அரசு கூறியது. இதை கண்டித்து ஆர்எஸ்எஸ், பாஜ, இந்து ஐக்கிய வேதி, பஜ்ரங்தள் உள்பட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபரிமலை உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு, சபரிமலை மறுசீராய்வு மனு மீதான வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த அன்றே தான் மீண்டும் சபரிமலை வருவேன் என்று திருப்தி தேசாய் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ‘பூமாதா பிரிகேட்’ என்ற அமைப்பின் தலைவரான திருப்தி தேசாய் கடந்த முறை சபரிமலை தரிசனத்துக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்டவர் ஆவார். ஆனால், இந்தமுறை சபரிமலை வந்தால் திருப்தி தேசாயை தடுத்து நிறுத்துவோம். சன்னிதானம் செல்ல விடமாட்டோம் என்று இந்துஅமைப்பினர் கூறினர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் திருப்தி தேசாய் தலைமையில் 5 இளம் பெண்கள் கொச்சி வந்தனர். அவர்கள் சபரிமலை செல்ல தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று விமான நிலையத்தில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

ஆனால் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தர முடியாது என்று அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து திருப்தி தேசாய் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் தான் சபரிமலை செல்ல வேண்டும். தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் கமிஷனர் இல்லாததால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று போலீசார் கைவிரித்து விட்டனர். இதனால் கமிஷனர் வரும்வரை அலுவலகத்திலேயே தங்க வைத்தனர். இதற்கிடையே கடந்த முறை சபரிமலையில் தரிசனம் செய்த கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணியும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். இதன் பிறகுதான் திருப்தி தேசாய் சபரிமலைக்கு செல்ல வந்திருப்பதாக பாஜ மற்றும் இந்து அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் அலுவலகம் முன்பு இந்து அமைப்பினர் திரண்டனர்.

https://twitter.com/aanthaireporter/status/1199319905301975040

இந்த நிலையில் பிந்து அம்மிணி, திருப்தி தேசாயை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த இந்து அமைப்பினர் அவரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இந்த நேரத்தில் எதிர்பாராத வகையில் சிலர் அவர் மீது மிளகாய் ஸ்பிரே அடித்தனர். இதனால் பதற்றம் நிலவியது. உடனடியாக போலீசார் அவரை மீட்டு எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை முடித்து அவர் திரும்பினர். அப்போதும் அங்கு திரண்டு நின்றவர்கள் அவரை மீண்டும் தாக்கியுள்ளனர். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாத்து அழைத்து சென்றனர். பின்னர் பிந்து அம்மிணியை எர்ணாகுளம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே போலீசார் திருப்தி தேசாய் குழுவினரை பாதுகாப்பு கருதி வேறு ரகசிய இடத்துக்கு மாற்றினர். இந்த நிலையில் தகவல் அறிந்த கமிஷனர் விஜய் சாக்கரே அலுவலகம் விரைந்து வந்தார். அவர் திருப்தி தேசாயிடம் பேசி வருகிறார்.

இதுகுறித்து திருப்தி தேசாய், “இந்தியாவில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை உண்டு. சபரிமலையில் இளம்பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆண்டு அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. எனவேதான் நான் தரிசனத்துக்காக சபரிமலை வந்துள்ளேன். சபரிமலை செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க கோரி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை. இந்த முறை எந்த காரணம் கொண்டும் நான் பின்வாங்க மாட்டேன். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த பிறகே திரும்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, திருப்தி தேசாய் குழுவினர் தரிசனம் செய்ய வந்துள்ளதால் நிலக்கல், பம்பை உள்பட சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று நிருபர்களிடம், “திருப்திதேசாய் மற்றும் குழுவினர் இன்று வந்தது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்தி தேசாய் தனது குழுவினருடன் கொச்சி வந்துள்ளார். அவர் வரும் விவரம் குறித்து போலீசுக்கு கூட தெரியாது. ஆனால் ஒரு டிவி சேனல் விமான நிலையத்தில் அவரது பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், சபரிமலையில் தரிசனத்துக்கு வந்திருப்பதாகவும், கோட்டயம் வழியாக சபரிமலை செல்வதாகவும் கூறினார்.

ஆனால் சிறிது நேரத்தில் அவர் கொச்சி கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் தகவல் வந்தது. அதற்குள் சில இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு சென்று மிளகாய் ஸ்பிரே தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன்மூலம் இது முன்கூட்டியே திட்டமிட்ட திரைக்கதையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருப்தி தேசாய் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் வலிமையாக உள்ள புனாவில் இருந்து தான் வந்துள்ளார். சமீப காலமாக சபரிமலையில் அமைதி நிலவுகிறது. இந்த அமைதியை சீர்குலைக்க அவர் வந்திருப்பதாக சந்தேகிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!