அடுத்த மாற்றம் ஆரம்பம்.. அனல் மின்சாரத்திற்கும் விடை கொடுப்போம் -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அடுத்த மாற்றம் ஆரம்பம்.. அனல் மின்சாரத்திற்கும் விடை கொடுப்போம் -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

லகின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி, கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு காரணமாக இருக்கும் புவி வெப்பமடைதலை எதிர்த்துப் பலமுனைப் போர் ஒன்றை உலக நாடுகள் மெதுவாக நடத்தி வருகின்றன. குறிப்பாக வளரும் நாடுகள் எனப்படும் மக்கள் தொகையை அதிகம் கொண்ட நாடுகள், ஏழ்மையை அதிகம் கொண்ட நாடுகள் இப்போரில் முன் செல்வதற்கு வசதியாக இந்நாடுகளுக்கு கடன் கொடுக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில் ஆசிய வளர்ச்சி வங்கி எனப்படும் ஏடிபி தற்போது ஒரு முக்கியக் கொள்கை முடிவை எடுத்துள்ளது. அந்த முடிவு வளரும் நாடுகளிலுள்ள அனல் மின் நிலையங்களுக்கு தொடர்ந்து உதவுவதில்லை. அதாவது இனிமேல் புதிய அனல்மின் நிலையங்களை அமைக்க இந்த நாட்டு அரசுகளுக்கு நிதியாதாரம் கிடைக்காது.

ஆசிய வளர்ச்சி வங்கி பெயருக்கு தகுந்தாற்போல ஆசிய நாடுகளின் வளர்ச்சித் தேவைகள், குறிப்பாக, உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்காகவே கடனுதவி அளிக்கும். இப்போது அனல் மின்சாரத்திற்கு நிதியுதவி அளிப்பதில்லை எனும் அதன் முடிவு கொள்கையளவில் எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளனர். எனவே புதிய அனல் மின் நிலையங்களை ஏற்படுத்துவதை சொந்த செலவில்தான் செய்து கொள்ள வேண்டும். ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அனல் மின் நிலையங்களும் வாகன எரிபொருட்கள் போல கரிய அமில வாயுவை கடுமையான அளவில் வெளிவிடுபவையாகும். இவற்றைக் கட்டுப்படுத்த 2030 ஆம் ஆண்டிற்குள் புவி வெப்பயமாதலுக்கு காரணமான வாயுக்களைக் குறைக்க வேண்டும் என்று பன்னாட்டு ஒப்பந்தம் வலியுறுத்துவதால் புதிய அனல் மின் நிலையங்களைத் திறக்க இயலாது. வங்கியின் அறிக்கையானது இந்நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய அளவில் சாதித்திருந்தாலும் அவை சுற்றுச்சூழல் அழிப்பிலும் கணிசமாக ஈடுபட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்நாடுகள் பருவ நிலை மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலையிலும் உள்ளன. எனவே எவ்வளவு விரைவில் கரிய அமில் வாயுவை வெளியிடும் ஆற்றல் வகைகளை இந்நாடுகள் நிறுத்துகின்றனவோ அவ்வளவு நல்லது.

வங்கியானது அனல் மின் நிலையங்கள் இல்லாவிட்டாலும் கூட 2030 ஆம் ஆண்டிற்குள் இந்நாடுகளில், ஆசியா-பசிபிக் பகுதியில் 200 மில்லியன் மக்களுக்கு மாற்று எரிசக்தி வளங்களைக் கொண்டு மின்சாரம் வழங்க முடியும் என்று கருதுகிறது. இப்பிரதேசத்தில் ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்தும் நாடு முழுதும் மின் வசதியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் 98% மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனல் மின்சாரத்தின் பங்கு 80% ற்கும் மேலாகும். மேலும் இந்நாடுகளில் சூரிய ஒளி ஆண்டிற்கு மூன்று மாதங்கள் தவிர மீதி நாட்களில் கிடைப்பதால் அங்கெல்லாம் கதிரவ ஆற்றலுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எனவே நீர் மின்சாரம், அணு மின்சாரம், கதிரொளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் என நால்வகையான மின்சாரத்தை இந்நாடுகள் மேற்கொள்ளலாம். இதில் அணு மின்சாரம் மிக ஆபத்தானதும், செலவு பிடிப்பதுமாகும். எனவே இதற்கு பதிலாக எரிவாயுக்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கு எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

ஒருவேளை எரிபொருள் இறக்குமதிக்குப் பதிலாக எரிவாயு இறக்குமதி சாத்தியமென்றால் நல்லதுதான். அத்துடன் ஹைட்ரஜன் வாயு மூலமும் மின்சாரமோ அல்லது எரியாற்றலையோ பெற முடியும் என்றால் மேலும் சிறப்பு. ஆயினும் இதற்கான ஆய்வுகள் முடிவடையவில்லை. விமானங்களைக் கூட ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கலாம் என்ற மாதிரி வடிவங்கள் உலா வருகின்றன. ஆயினும் பரவலான பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்று தெரியாது. மேலும் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனையோ அல்லது தண்ணீரையோ கூட பயன்படுத்த ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. ஆகையால் இனி எதிர்காலத்தில் மின்சாரம் என்பது மின் கம்பிகள் வழியே வராது. வீட்டிற்குள்ளேயே உற்பத்தியாகும் சூழல் அடுத்த பத்தாண்டுகளில் நாம் கண்ணெதிரே காண முடியும்.

-ரமேஷ் கிருஷ்ணன் பாபு