அமெரிக்கா-சீனா: அடுத்தது என்ன? போரா, பேச்சு வார்த்தையா? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அமெரிக்கா-சீனா: அடுத்தது என்ன? போரா, பேச்சு வார்த்தையா? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பதவியேற்று ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கவனத்தைப் பன்னாட்டு விவகாரங்களின் மீது அதிகம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியான அறிக்கைகள் மூலம் சீனாவை எச்சரிக்கும் விதத்தில் பேசியுள்ள பைடன் தனது கூட்டாளிகளை அமெரிக்க கைவிடாது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் புதிய அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கிழக்கு மற்றும் தென் சீனக்கடலில் எவ்வித மாற்றங்களையும் அமெரிக்க அனுமதிக்காது என்று உறுதி கூறியுள்ளார். சீனா தொடர்ந்து தைவான் சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொள்வது போர் தொடுப்பதற்கு சமம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிபர் தேர்தலின் முடிவை முதலில் சீனா ஏற்க மறுத்துவிட்டது. பின்னர் பல நாடுகள் பைடனுக்கு வாழ்த்துச் சொல்லவும் தவிர்க்க இயலாமல் வாழ்த்துச் சொன்னது. மேலும் பைடனை விட டிரம்ப் தங்களுக்கு சாதகமாக நடந்துக் கொள்வார் என்றே சீனா கருதி வந்துள்ளதும் வெளிப்பட்டுள்ளது. டிரம்ப் சீனாவின் கைப்பாவையான வட கொரியாவின் அதிபர் கிம் மை நேரில் சந்தித்து சமாதானம் பேசியதைத் தனக்கு சாதகமாகவே எடுத்துக்கொண்டுள்ளது தெரிய வருகிறது.

ஆனாலும் தென் சீனக் கடலில் சீனாவிற்கு எவ்விதமான வரலாற்றுத் தொடர்புகளும் இல்லை என்று சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதில் இருந்து சீனாவின் சர்ச்சைக்குரிய அணுகு முறை தீவிரமடைந்து வந்துள்ளது. ஏற்கனவே ஜப்பானிடம் சென்காகு தீவுகளை தங்களு டையது என்று உரிமைக்கொண்டாடி வருகிறது. ஜப்பானின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதி மொழி அளித்துள்ளதால் நேரடியாக மோத இயலாத நிலையில் உள்ளது சீனா. மேலும் இந்தியாவிலும், திபெத்திலும் பலப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது சீனா. நீண்ட காலமாக தனது இராணுவ, பொருளாதார வலிமையைக் கூட்டுக்கொண்டுள்ள சீனா எவ்விதமான போருக்கும் தயார் என்றே கூறி வருகிறது. இதுவரை பதவி வகித்த சீன அதிபர்களிலேயே பெரும் செல்வாக்குப் படைத்த ஸீ ஜின்பிங் ஆயுட்கால அதிபராகத் தேர்வு செய்யப்பட்டவராவார். இதனால் சீனாவின் கட்டுப்பாடற்ற அரசியல் நகர்வுகள் சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

சீனாவில் பொருளாதாரத் தேக்கம் முடிந்து விட்டதாகக் கூறப்பட்டாலும் அங்கு உள்நாட்டுத் தேவையில் வேகமான வளர்ச்சியில்லை. இதனால்தான் போர் ஒன்றை சீனா ஏற்படுத்தி கவனத்தைத் திசைத்திருப்ப முயல்கிறது எனும் குற்றச்சாட்டு அயல்நாடுகளில் வசிக்கும் சீனர்களால் முன் வைக்கப்படுகிறது. சிலரோ மாவோவின் சிந்தனைகள் பிரபலமாகி வருகின்றன என்றும் அதிபர் ஸீ கூட்டம் ஒன்றில், “தனது நிறத்தை சீனா மாற்றிக் கொள்ளக் கூடாது” என்றும் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர். சீனாவின் வளர்ச்சியில் ஏராளமான அயல்நாட்டு நிறுவனங்களின் பங்கு மிக அதிகமானது. சொல்லப்போனால் சீனாவின் உயர்கல்வி பெற்றவர்களின் பங்கு என்பது மிகக்குறைவு. இந்தியாவுடன் ஒப்பிட்டால் உள்நாட்டில் இல்லாவிட்டாலும் அயல்நாடுகளில் இந்தியர்களின் அறிவு ஏற்படுத்தியத்தாக்கம் அபரிமிதமானது.

இந்தியாவிடம் மோதுவதைக்காட்டிலும் மிரட்டி சில சலுகைகளையோ அல்லது நிரந்தரமாகச் சில அனுகூலங்களையோ சீனா அடைய முயற்சிக்கிறது. குறிப்பாக திபெத்தையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் சீனாவின் பகுதிகளாக ஆக்கிக்கொள்ளும் முயற்சி. இதே போலத்தான் தென் கொரியா, ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா தொடர்ந்து முயன்று வருகிறது. இதையொட்டியே அமெரிக்கா கடந்த மூன்றாண்டுகளாக இந்தியாவுடன் நெருக்கமான உடன்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே புதிதாக ஐநாவில் அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், “இந்தியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கும் முயற்சி தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒன்று” என்று கூறியுள்ளார். இதற்கு முன்பிருந்த மூன்று அதிபர்களும் இக்கருத்தை தங்களின் கொள்கையாகவே அறிவித்திருந்தனர். பைடனும் தனது தேர்தல் அறிக்கையில் இந்தியா விற்கான ஆதரவு தொடரும் என்றே குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்தில் தனது நியமனத்தை உறுதி செய்யும் பேட்டியின் போது லிண்டா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐநாவில் சீர்திருத்தம் தேவை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சீனா ஜப்பான், இந்தியா ஐநாவின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர்களாக மாறுவது தனக்கு பாதுகாப்பானதல்ல என்பதால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மறைமுகமாக எகிப்து, பாகிஸ்தான், இத்தாலி, மெக்சிகோ போன்ற நாடுகளின் உதவியுடன் இம்முயற்சியைத் தடுக்கப்பார்க்கிறது.

பல ஆண்டுகளாகத் தள்ளிப்போகும் ஐநாவின் சீர்திருத்தம் பைடன் பதவிக்காலத்திலாவது நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஒன்று நடைபெறுவதைத் தடுக்க ஒரு போரை சீனா துவக்குமா என்பதையும் காண வேண்டியுள்ளது.

ரமேஷ் பாபு

Related Posts

error: Content is protected !!