முழக்கங்களின் ஜனநாயக முடக்கம்: சரியா? தவறா? ரமேஷ் பாபு!

முழக்கங்களின் ஜனநாயக முடக்கம்: சரியா? தவறா?  ரமேஷ் பாபு!

டப்பு குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இருநாட்களில் 12 மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் தொடர் முழுதும் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது நடத்தைக்கு மன்னிப்புக் கேட்டால் மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியோ அவர்கள் மக்கள் பிரச்சினையைப் பற்றி பேசியதற்கு ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்க்கேள்விக் கேட்டுள்ளார். இந்த விவகாரம் மாநிலங்கள் அவையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் சட்ட முன் வடிவானது விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது குறித்ததாகும். உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது பொதுக்காப்பீடு திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டப்போதாகும். பின்னர் அவர்கள் தொடர் முழுவதும் நீக்கப்பட்டனர்.. முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் விவாதமின்றி சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றப்பட்டது பிரதமர் எந்தவொரு விவாதத்திற்கும் தயார் என்பதற்கு முரணாக உள்ளது. விவாதமின்றி நாடாளுமன்றம் இயங்கும் ஜனநாயகம் நீடூழி வாழ்க என்று டிவீட் இட்டுள்ளார்.

நாடாளுமன்றமே மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துரைக்க பொருத்தமான இடம் என்பதில் ஐயமில்லை. இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகமாக கடந்த 75 ஆண்டுகளாக விளங்கி வருவதும் நாம் அறிந்ததே. 1951-52 ஆம் ஆண்டில்தான் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றாலும் கூட 1947 முதல் 1952 ஆம் ஆண்டு வரை அரசியல் நிர்ணய சபையே நாடாளுமன்றமாகவும் செயல்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தப் பிறகு தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் பொதுத் தேர்தலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அன்றிலிருந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் பல முறை முடக்கப்பட்டும், விரைவாக கூட்டத் தொடர் முடிக்கப்பட்டும் விடுவது நிகழ்ந்துள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றம் பொம்மையாகவே இருந்தது. இதையெல்லாம் கடந்து ஒரேயொரு வாக்கு வேறுபாட்டில் வாஜ்பாய் அரசு கவிழ்க்கப்பட்டதும் நாடாளுமன்ற ஜனநாயகம் உயிர்ப்புடன் செயல்படுவதற்கு சாட்சியமாக விளங்கியது.

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அவைக்குழு, அறநெறிக்குழு போன்றவை உறுப்பினர்கள் தவறிழைத்தால் விசாரணை செய்யும். இதெல்லாம் ஒரு காலகட்டம் வரையில்தான். 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சியினரே எதிர்க்கட்சிகளைப் பேசவிடாமல் கூச்சலிடுவது என்ற அதிசய மரபு உருவாகியது. இதற்கு வாஜ்பாய் போன்ற தலைவர்களும் கூடத் தப்பவில்லை. இதன் பிறகு 1990 களில் அவை மையத்திற்குள் நுழைந்து அமளியில் ஈடுபடுவது சபை நடவடிக்கைகளை முடக்குவது வழக்கமாகிப் போனது. பின்னர் 2001 ஆம் ஆண்டில் இது போன்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்களை இடை நீக்கம் செய்வது என்று முடிவாகி விதி 374-ஏ எனும் பிரிவு உருவாக்கப்பட்டது. ஆயினும் 13 ஆண்டுகளுக்கு இந்த விதி நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு வழியாக 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீரா குமார் அனைத்தலைவராக இருந்த போது மக்களவையில் 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக 12 உறுப்பினர்களை இடை நீக்கம் செய்தார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வரையில் 42 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்றாண்டு கூட உறுப்பினர்கள் இடை நீக்கம் தொடர்ந்தது. இதுவும் கூட உறுப்பினர்களின் அவை நடவடிக்கைகளை முடக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அடுத்தது என்ன வகையான விதி வகுக்கப்படும் என்பது தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டுமென்றால் அவைகள் வருடத்திற்கு அதிக நாட்கள் நடைபெற வேண்டும். இந்தியா போன்ற நாட்டில் இப்படி ஆண்டிற்கு 4 மாதங்கள் வரை மட்டுமே நாடாளுமன்றம் கூடுவதே இது போன்ற சிக்கல்களை உருவாக்குகிறது. தொகுதிக்கு உறுப்பினர்கள் செல்ல வேண்டும் என்றால் சுழற்சி முறையில் குறைந்தபட்ச எண்ணிக்கையில் (கோரம் – Quorum) உறுப்பினர்களை வைத்துக் கொள்ள கட்சிகள் அனுமதிக்கப்பட வேண்டும். அதிக நேரம் விவாதத்திற்கு கிடைக்கும் போது எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அதிக நேரம் கிடைக்கும். அமளியில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. மேலும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் நாடாளுமன்றத்தை அவசரத்தேவைக்கு இணைய இணைப்பிலேயே கூட நடத்த முடியுமே? அனைத்து உறுப்பினர்களும் விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை. சுமார் 10-20 உறுப்பினர்கள் மட்டுமே எந்தவொரு விஷயத்தைக் குறித்தும் பேச அனுமதி வேண்டுவார்கள். இன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் 10-15 பேர் வரை அமர்ந்து உரத்தக் குரலில் தங்கள் தரப்பை நிலை நாட்டப் போராடும் காட்சிகளைப் பார்க்கும் போது இதையே ஏன் நாடாளுமன்ற, மாநிலப் பேரவைகளிலும் பின்பற்றக்கூடாது எனும் கேள்வி பாமரனுக்கும் கூட தோன்றுமே? மக்களே இதை வலியுறுத்தும் முன்னர் மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து சிந்தித்து செயல்பட்டால் முழக்க ஜனநாயக முடக்கம் எனும் விஷயமே மறைந்துப் போகும்.

முழக்க ஜனநாயக முடக்கம் என்பது ஒரு வகையில் போராட்ட வடிவமே. அது உச்சபட்ச நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று, ஆனால் இன்று அன்றைய செய்தித்தாளில் வந்த செய்தியைக் கூட இப்போராட்ட வடிவத்தில் பயன்படுத்தி அவை நடவடிக்கைகளை முடக்குவது சரியா? கோடிக்கணக்கில் மக்கள் பணம் செலவழித்து நடத்தப்படும் நாடாளுமன்றம் விவாதங்கள் ஏதுமின்றி கூச்சல், குழப்பத்தில் முடிந்து போவதுதான் ஜனநாயக மரபுகளுக்கு உகந்ததா? இதை மக்கள் பிரதிநிதிகள் சீர்தூக்கிப் பார்த்தால்தான் நியாயம் புரியும். நாடாளுமன்றம் தெருப் பொதுக்கூட்ட மேடையின் நீட்டிப்பு அல்ல. அதற்கென்று மாண்பு உள்ளது; உலக நாடுகள் நமது நாடாளுமன்றத்தில் என்னென்ன சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன; இரு அவைகளும் எப்படி நடக்கின்றன என்று தெரிந்துக் கொள்ள விரும்பினால் அவர்கள் நொந்துதான் போவார்கள். அதற்காக இதர நாடுகளில் அடிதடியே நடக்கிறதே என்று குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது… நாம் எப்படி நடத்துகிறோம் என்பதே சரி, தவறு என்பதற்கு முன்னுதாரணம் படைக்க வேண்டும். இல்லையா?

ரமேஷ்பாபு

Related Posts

error: Content is protected !!