தேர்தல்தான் வருது! தேர்தல் சீர்திருத்தம் எப்ப வரும்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தேர்தல்தான் வருது! தேர்தல் சீர்திருத்தம் எப்ப வரும்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இந்தியாவில் தேர்தல்களும், ரயில் விபத்துக்களும் அடிக்கடி நடைபெறும் வழக்கம் என்று மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி சொல்வார்.இப்படி அடிக்கடி தேர்தல் நடைபெறுவதைத் தடுக்க பிரதமர் மோடி கொண்டு வரும் சீர்திருத்தம் ஒரே நாடு; ஒரே தேர்தல்.அதாவது மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவை ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் எனும் புதியமுறை. இந்தியாவில் 1960கள் வரை தேர்தல்கள் இப்படி இணைந்தே நடந்தன. தமிழகத்திலும் பலமுறை நடந்துள்ளது. கடைசியாக 1996 ஆம் ஆண்டில் ஒரே நாளில் இரண்டு தேர்தல்களும் நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 20 பேரவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலோடு இடைத் தேர்தல் நடைபெற்றது.எனவே ஒரே நேரத்தில் தேர்தல் என்பது புதிதல்ல. ஆனாலும் இப்படி ஒரே நேரத்தில் நடத்துவது கெடுபிடியாக காணப்படக்கூடாது என்கின்றனர் அரசியல் கட்சியினரும், ஜனநாயக ஆர்வலர்களும்.

இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம்குறித்து பல குழுக்களை அமைத்து அவர்களும் பலப் பரிந்துரைகளை அளித்து விட்டனர். ஆயினும், வாக்கு இயந்திரமும், புகைப்பட வாக்காளர் பட்டியல் என ஒரு சில மாற்றங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் அமைப்பு, உட்கட்சித் தேர்தல், நிதி, தேர்தல் வேட்பாளர் தகுதி, வெற்றிப் பெறும் விழுக்காடு, பெண்களுக்கான இடம் எனப் பல அம்சங்கள் சீர்திருத்தப்பட வேண்டும். தேர்தலில் காணப்படும் அறமற்ற செயல்பாடு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்குவதில் அடங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளையும், தேர்தலையும், ஜனநாயக அமைப்பையுமே சிதைக்கும் போக்காகும் இது. இதை மாற்றியமைக்க வேண்டுமென்றால் தேர்தலில் பணத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும்.எப்படி?அரசியல் பொருளீட்டும், வாழ்வாதாரம் தேடும் தொழில் இல்லை அதொரு சேவை என்பதை நிலை நிறுத்த வேண்டும். பணம், பரிசு கொடுத்தாலும் விரும்பும் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என்று மக்கள் உறுதி கொண்டால் இப்பழக்கம் ஒழியும்.ஆயினும், தேர்தல் சீர்திருத்தம் ஒன்றின் மூலமே இதற்கொரு நிரந்தரத்தீர்வு காண இயலும்.

கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் நாம் முன் வைக்கும் சில தேர்தல் சீர்திருத்தப் பரிந்துரைகளாவன:

1) முதல் சீர்திருத்தம் தேர்தலில் பிரதிநிதித்துவ முறையை அதாவது ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதிகளை வழங்குவது. இப்போதிருக்கும் முறையில் 30% வாக்குகளை தேசிய அளவில் பெற்றால் மத்தியில் ஆட்சியமைத்து விட முடியும். மீதம் 70% பேர் ஆட்சிக்கு எதிராகத்தானே வாக்களித்தனர்? அவ்வாறு இருக்கும் போது எப்படி பொதுவான அரசாக ஆட்சியமைப்போர் இருக்க முடியும்? இக்கேள்விக்கு பதில் இல்லை. பிரதி நிதித்துவ முறையில் பெரும்பான்மை பெற வேண்டும் என்றால் 50% வாக்குகளையாவது ஒரு கட்சி பெற வேண்டும். இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் கட்சிக்குத்தான் ஓட்டு; வேட்பாளருக்கு இல்லை. எனவே வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. பெயருக்குத்தான் வேட்பாளர். இதனால் மக்களுடன் தொடர்பு என்பது துண்டிக்கப்படுகிறது. மேலும் இந்தியா போன்ற பல மொழி, இனம், நிலப்பரப்பு, மக்களின் சமூகப் பொருளியில் வேறுபாடுகள் இவையெல்லாம் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையைத் தராது. எனவே எப்போதும் நிலையற்றத்தன்மையே நீடிக்கலாம்.

2) தேர்தலில் பணத்தின் செல்வாக்கை நிறுத்த ஒவ்வொரு கட்சியும் வரையற்ற முறையில் நன்கொடைகளைப் பெறலாம். ஆனால் வங்கிக்கணக்கு வழியேதான் பெற வேண்டும். செலவழிக்கும் பணத்திற்கு முறையான கணக்கு வேண்டும். மேலும் அவ்வாறு செலவழிக்கும் தொகையில் 15% தேர்தல் வரியாக கட்ட வேண்டும். அத்துடன் அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். சட்ட்த்திற்கு அப்பாற்பட்ட செயல்களிலோ அல்லது அதன் மூலம் ஈட்டப்பட்ட பணம் கட்சிக்கு வழங்கப்படுவது முழுவதுமாக தடைச் செய்யப்பட வேண்டும்..

3) கடந்த மக்களவைத் தேர்தலில் தபால் வாக்குகளை மின்னணு வசதி மூலம் அளித்திடும் முறையொன்று அறிமுகம் ஆனது. ஆங்கிலத்தில் ETPBS (Electronically Transmitted Postal Ballot System) எனப்படும் இம்முறையை இராணுவத்தினர், அயல் வாழ்வாக்காளர்கள் பயன்படுத்தினர். இதன் மூலம் இதுவரை சுமார் 4% மட்டுமே இருந்தத பால் வாக்குகளின் அளவு 11,00,000 வரையில்உயர்ந்தது. இது ஒரு இணையதள அமைப்பாகும். இதில் இரண்டு கட்ட பாதுகாப்பு அம்சங்கள் உண்டு. இதன் மூலம் இராணுவ வீர்ர் தனது தொகுதியின் வாக்கைதான் பணிபுரியும் இடத்திலேயே போட முடியும். இதையே ஒருசெயலியாக வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் மாற்றினால் நேரில் சென்று வாக்களிக்க இயலாதவர்கள் அனைவரும் இச்செயலியைப் பயன்படுத்தி வாக்களிக்கமுடியும். யார் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துவிடலாம். வாக்கு எண்ணிக்கை அன்றே விவரம் வெளி வரும். இதன் மூலம் ஓரளவிற்கு வாக்குப்பதிவு விழுக்காட்டை அதிகரிக்கலாம், மேலும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கமுடியும்.

4) பதிவாகும் வாக்குகளில் குறைந்தது 40% அல்லது 50% வாக்குகளைப் பெறும் வேட்பாளரையே வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். யாருக்கும் அந்த எண்ணிக்கையில் வாக்குகள் கிடைக்க வில்லையென்றால் 25% வாக்குகள் பெற்ற வேட்பாளர்களை மட்டும் அனுமதித்து அடுத்தச் சுற்று தேர்தல் நடத்த வேண்டும்.

5) தேர்தலில் பெண்களின் பங்கு அதிகரிக்கவில்லை. இத்தனைக்கும் 50% வாக்காளர்கள் பெண்கள். இந் நிலையில் மகளிர் வாக்கு 50% ற்கும் மேற்பட்டத் தொகுதிகளை மகளிர் தொகுதிகளாக அறிவிக்கலாம். இது தனித் தொகுதிகளுக்கும் பொருந்தும். இதனால் ஓரளவாவது ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றச் செய்ய முடியும்.

6) இடைத் தேர்தல்களைத் தடுக்க உறுப்பினர் இறந்தால் ஏற்கனவே வென்ற கட்சிக்கே தொகுதி வழங்கப்படும். ஏனெனில் 50% வாக்குகளைப் பெற்றே உறுப்பினர் தேர்வாவதால் மீண்டும் தேர்தல் தேவையில்லை.

7) பெரும்பான்மை இல்லாமல் அரசு அமைந்தால் என்ன செய்வது? அடிக்கடி தேர்தல் வரலாமா? இல்லை சிறுபான்மை அரசை அனுமதித்து ஆனால் சட்டங்கள் நிறைவேற கட்சிக்கு அப்பாற்பட்டு அதிக உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் சட்டம் நிறைவேறியதாக சொல்ல இயலுமா? இப்படியான மாற்றத்தின் மூலம் கூட்டணி அரசுக் குதிரைப் பேரங்களைத் தடுக்க முடியும். இந்தியா உலகளவில் முன்னணி நாடாக மாறி வரும் நிலையில் ஜனநாயகம் வலுப்பெற வேண்டும். இதற்கு தேர்தல் சீர்திருத்தங்கள் மிகக் கட்டாயம் தேவை. எவ்வளவு விரைவாக அதைச் செய்கிறோமோ அந்தளவிற்கு நன்மையைத் தரும் என்பதில் ஐயமுண்டோ?

ரமேஷ் பாபு

error: Content is protected !!