June 7, 2023

அயோத்தி : ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது!

சற்றேறக்குறைய 490 ஆண்டுகள் சர்ச்சை நீடித்து சுப்ரீம் கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட முக்கிய வழக்கு அயோத்தி ராமர் கோயில் வழக்கு. அயோத்தியில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு பல கட்டுமானப் பொருட்கள் தேவைப்படுகின்றன. கட்டுமானப் பணிகளுக்கு பல தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் இப்பணியை தள்ளிப் போடாமல் திட்டமிட்டப்படி துவக்கினர்.

அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதன்படி சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கோவில் கட்டுமான பணிகளுக்காக கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கோவிலில் இருந்து ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த மே மாதம் 26ம் தேதி பூமி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, ராமஜென்மபூமியில் இன்று முதல் கட்டுமான பணிகள் துவங்கின. முதல் கட்டமாக அந்த இடத்தில் சிவபெருமானுக்கு இன்று காலை 8 மணிக்கு ருத்ராபிஷேகம் என்ற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

‘’இலங்கை மீதான படையெடுப்பதற்கு முன்பு, சிவனை ராமர் வழிபட்டதை பின்பற்றி, இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது” என்று ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன்தாஸ் தெரிவித்தார். அவரும், இதர அர்ச்சகர்களும் இந்த சடங்குகளை நடத்தினர்.சுமார் இரண்டு மணி நேர பூஜை மற்றும் சடங்குகளுக்கு பின் கட்டுமான பணிகள் துவங்குவதற்கு அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைத்து அடிக்கல் நாட்டப்பட்டது.