June 1, 2023

கடவுள் பாதி : காவலன் மீதி = கலந்து செய்த அமித்ஷா – ரஜினி புகழாரம்! – வீடியோ!

அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு தான் தெரியும். அதே சமயம் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித் ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது என புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய (LISTENING, LEARNING & LEADING…, A chronicle of the Hon’ble Vice President of India, Venkaiah Naidu’s Two Years in Office) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை – கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, “காஷ்மீர் பிரச்சினையில் அரசு எடுத்தது துணிச்சலான முடிவு. ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ஐ நீக்கி அமித் ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. அது குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது.காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அமித் ஷாவும், மோடியும், கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது நமக்கு தெரியாது. ஆனால், அது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.எந்நேரமும் மக்களைப் பற்றி சிந்திப்பவர் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு.வெங்கய்ய நாயுடு சிறந்த ஆன்மிகவாதி, தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார்”என்றார்.

இவ் விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 370 வது பிரிவை நீக்குவது குறித்து, ‘ஒரு உள்துறை அமைச்சராக, என்ன நடக்கும் என்பதில் நான் சிறிதும் தயங்கவில்லை. ஏனெனில் அது புதிய காஷ்மீரை உருவாக்கும். ஆனால் மாநிலங்களவையில் என்ன நடக்கமோ? என்று நான் அஞ்சினேன். ஆனால் வெங்கையா நாயுடு ஜி காரணமாகவே அனைவரும் அதை ஆதரித்தனர். காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன். தமிழில் பேசமுடியாததற்க்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.

முதலமைச்சர் பழனிசாமி உரையின் போது, ‘உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கையே உதாரணம். தமிழகத்தின் மீது தொடர்ந்து அன்பு வைத்திருப்பவர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது சில வார்த்தைகளை தமிழில் பேசுவார் வெங்கய்ய நாயுடு.மாணவர் பருவத்தில் இருந்தே சமூக பணிகளைத் தொடங்கியவர். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டவர். மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுத் தந்துள்ளார்’என்று கூறினார்.

இந்த விழா நாயகன் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசிய போது, “எல்லா துறைகளிலும் சிறந்தவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து நான் ஓய்வு பெறவில்லை. விவசாயியின் மகன் நான். எளிய விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவனுக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி தந்தது நெகிழ்ச்சியாக உள்ளது. அறிவை விரிவுபடுத்த தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திப்பதிலேயே மகிழ்ச்சி. பொது வாழ்வில் உள்ளவர்களிடம் இருந்து கற்று வருகிறேன்.70 வயதை அடைந்தவுடன் அரசியலை விட்டு, சமூக சேவையில் ஈடுபட நினைத்தேன். குடியரசு தலைவராக என்னை தேர்வு செய்வார்கள் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.கூட்டத்திற்கு வாஜ்பாய் வருகிறார் என சுவரில் எழுதிய நான், வாஜ்பாய் அருகில் அமர்ந்து கட்சி தலைவரானேன்.

வாழ்க்கையின் உச்சத்தை தந்த கட்சியை விட்டு கனத்த இதயத்துடன் வெளியேறினேன்.ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு உலக நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கின்றன.மோடி அரசின் சீர்திருத்தங்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன. நாடாளுமன்றம், சட்டமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பிரிவினைகளை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும்.

ஒரு மொழியை திணிக்கவும் கூடாது, ஒரு மொழியை எதிர்க்கவும் கூடாது. அனைவரும் அனைத்து மொழியையும் அறிந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம்.ஒவ்வொருவருக்கும் தாய் மொழி மிகவும் அவசியம். தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பிறகு மற்ற மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் 20% மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.எல்லோரும் எப்போதும் கற்றுக்கொள்ளும் மாணவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.