ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் -விமர்சனம்!

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் -விமர்சனம்!

மிழ் சினிமாவில் அத்திப்பூத்தாற் போல் நம்மை சுற்றி நிலவும் அரசியலை மிக்ஸ் செய்து நடக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு என்பதையும் சொல்ல முயலும் படம் வருதுண்டு. அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் ஆவலில் உருவானதுதான் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம். அந்த வகையில் பலத்தரப்பட்ட ஆட்சியாளர்களின் மோசடியால் எளிய மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் அழுத்தமாக சொல்ல முயன்று, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் அரசில் மூர்த்தி, கூடுதல் சுவாரஸ்யத்திற்காக இரண்டு காளை மாடுகளை கதை நெடுகிலும் உலாவ விட்டு தனிக் கவனம் பெறுகிறார்.

அதாவது ஒரு கிராமம், ஒரு ஏழை விவசாயி அவனது மாடு அதன் பின்னணியில் ஒரு அரசியலையும் தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் நையாண்டி வகையில் சாட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை. விரிவாக சொல்வதானால் தமிழ் நாட்டின் தென் தமிழகத்தில் பூச்சேரி என்ற கிராமத்தில் வசிக்கும் தம்பதி மாணிக்கம் மற்றும் ரம்யா பாண்டியன். இவர்கள் ஆசை ஆசையாய் வளர்த்து வரும் காளைகளான வெள்ளையன் மற்றும் கருப்பன் இரண்டும் காணாமல் போய்விடுகிறது. தொலைந்த காளைகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இந்த தகவலை செய்தியாளரான நடிகை வாணி போஜன் அறிந்து அதை ஒரு செய்தியாக்கி உலகத்திற்கு வெளிகொண்டுவருகிறார். அதை அடுத்து அரங்கேறும் அல்லோகலம்தான் படத்தின் கதை. அமீர்கானின் peepli live, தமிழில் வந்த ‘காக்கா முட்டை’ போல வந்திருக்க வேண்டிய படம் -ஜஸ்ட் மிஸ்ட்!

குன்னி முத்து என்ற கேரக்டரில் காளை மாடுகளை தான் பெறாத பிள்ளைகளாக பாவிக்கும் பாசக்கார மற்றும் அப்பாவித்தனம் கொண்ட பக்கா கிராமத்து ஆசாமியாக நடித்து அசத்தி இருக்கிறார் மிதுன் மாணிக்கம், ஹீரோ குன்னி முத்துவின் மனைவியாக வீராயி என்ற ரோலில் வரும் ரம்யா பாண்டியன் தன் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார். ஜர்னலிஸ்டாக வரும் வாணி போஜன் இந்த மாடுகள் காணாமல் போனதில் அரசியல் இருப்பதாக ஊதி., ஊதி அதை தேச பிரச்சினையாக மாற்றும் பணியை செய்வதில் ஸ்கோர் செய்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வடிவேல் முருகன் மற்றும் அப்பத்தாவாக நடித்திருக்கும் லக்ஷ்மி போன்றோர் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன. பாடலாசிரியர்கள் விவேக், யுகபாரதி, மதங்குமார் ஆகியோரின் வரிகள் மக்களின் செவிகளில் மட்டும் இன்றி மனதிற்குள்ளும் இறங்கும் வகையில் இசையமைத்திருக்கும் கிரிஷ், பின்னணி இசையையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

கிராமியக் கதைக்களத்தை தேவையான ஒளியோடு படமாக்கியிருக்கிறார் கேமராமேன் சுகுமார். பின்னணி பாடகர் கிரிஷ் இசை ஓ.கே.ரகம்.

மொத்தத்தில் இரண்டு மாடுகளை ஓட விட்டு இந்தி திணிப்பு, ஜாதிப்பிரச்சனை, கல்வியறிவு, அரசியல், விவசாயம், டாஸ்மாக், ரேஷன் விநியோகம், ஊழல் என சகல சமாச்சாரங்களிலும் கருத்து சொல்லி கவர முயன்று இருக்கிறார்கள்..

மார்க் 2.75/5

error: Content is protected !!