சென்னைத் தீவுத் திடலில் ஜல்லிக்கட்டு! – ஆர்ஜெ பாலாஜி யோசனை

சென்னைத் தீவுத் திடலில் ஜல்லிக்கட்டு! – ஆர்ஜெ பாலாஜி யோசனை

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகமெங்கும் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசின் அனுமதியுடன் அவசர சட்டத்தை தமிழக அரசு சனிக்கிழமை பிறப்பித்தது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான ராப்பூசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.இதைத்தொடர்ந்து, ராப்பூசலில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஆட்சியர் சு.கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒன்றன்பின் ஒன்றாக புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 168 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அவர்களில் லெட்சுமணப்பட்டி மோகன், ஒடுக்கூர் ராஜா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

rj balaji jan 22

இதனிடையே தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்று இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆர்ஜெ. பாலாஜி. தற்போது அறிக்கை ஒன்றை தனது ஃபேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

அதில் அவர், “”கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே பார்க்காத அளவிற்கு ஒரு மாபெரும் புரட்சியை மக்களாகிய நாம் நிகழ்த்தியிருக்கிறோம். இந்தப் புரட்சி எந்த அளவிற்கு ஒரு முக்கியமான வரலாற்று பதிவென்றால் மக்களாகிய நாம் தெருவில் இறங்கி நம்முடைய உரிமைக்காக போராட்டி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.நமது புரட்சியினால் நமது அரசாங்கம் ஜல்லிக்கட்டை ஒரு அவசர சட்டம் மூலம் நிரந்தரமாக நடத்துவதற்கு எல்லா வழிவகையையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறது. கிட்டத்தட்ட 3 வருடமாக யாருமே முயற்சி எடுக்காத யாருமே நம்மை முன்னிறுத்திப் பேசாத ஒரு விஷயத்திற்காக நாம் தெருவில் இறங்கி போராடியதால் கிடைத்த விளைவும், அதோட வெற்றியும் தான் இது. ஆனால், நிரந்தர வெற்றி என்பது Amend PCA & Ban PETA தான். இதை அடைவதே நமது லட்சியம்.

இது ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் என்றாலும் கிட்டதட்ட ஒரு 20, 25 வருடமாக அனைத்து மக்கள் மனதிலும் இருந்த கோபம், ஆதங்கம் எல்லாவற்றுடைய வெளிப்பாடாக காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, பெப்சி கோக் தடை செய்ய வேண்டும் என்ற பல விஷயங்களை இந்தப் புரட்சி பேச வைத்தது. நம்மைச் சுற்றி நிகழும் பல அரசியல் நிகழ்வுகளை இது கவனிக்க வைத்தது. அரசியல் என்பது தேர்தலில் நிற்பது மட்டுமல்ல. தெருவில் இருக்கும் ஒரு மரம் வெட்டப்பட்டுவதை நாம் தடுத்தால் அதுவும் ஒரு பெரிய அரசியல் என்று புரிய வைத்தது. இது தான் நிதர்சனமான உண்மை,

இந்தப் புரட்சி அறவழியில் நடந்ததாலேயே உலகம் இதை ஏற்றுக் கொண்டது. இந்தியா இந்தப் போராட்டத்தை புரிந்து கொண்டதோ, இல்லையோ நாம் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஒன்றாக சேர்ந்திருக்கிறோம் என்று புரிந்து கொண்டது. இந்தப் புரட்சியில் கிடைத்த வெற்றியை ஒரு ஆரம்பம், தொடக்கம் என்று எடுத்துக் கொண்டு இதைக் கொண்டாடுவோம். இது மட்டுமல்ல, இதன்பின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கடைகோடித் தமிழனாக நான் உங்களின் பின் நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த மக்கள் புரட்சி வெற்றி பெற்றதன் அடையாளமாக ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவோம் என்று உறுதி அளித்திருக்கிறீர்கள். இந்த ஜல்லிக்கட்டை தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் தீவுத்திடலில் வருடா வருடம் அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து நடத்திய இந்த புரட்சியின் நினைவாக ஒரு மாபெரும் தமிழர் திருவிழாவாய் நடத்த வேண்டுமென்று ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

error: Content is protected !!