புஷ்பா – தி ரைஸ் – விமர்சனம்!
ஒரு சினிமா -அதுவும் தெலுங்கு சினிமா என்றால் காரம் கொஞ்சம் தூக்கலாக இருப்பது வாடிக்கைதான். அதனால்தானோ என்னவோ புஷ்பா பட ரிலீஸை தமிழ் ரசிகர்கள் கூட கொஞ்சம் எல்லை மீறி ஆர்வப்பட்டார்கள். கிட்டத்தட்ட ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு இந்த ‘புஷ்பா’ -வுக்குதான் ஏக எதிர்ப்பார்ப்பு.. அப்படியான ரசிகர்களை முழுமையாக கவராவிட்டாலும் அதகளப்படுத்தி இருக்கும் அல்லு அர்ஜூனின் நடிப்பிற்க்காகவே கொடுத்த காசு ஜீரணித்து விடுகிறது.
‘புஷ்பராஜ்’ என்ற நேமுடன் வரும் நாயகன் அல்லு அர்ஜுன் கூலித் தொழிலாளி. யாருக்கும் அடங்காத மனோபாவம் அவருடையது. அவர் ஒரு சமயத்தில் செம்மரம் வெட்டும் வேலைக்குச் செல்கிறார். அச்சூழலை கிரகித்துக் கொண்டு வெட்டிய செம்மரங்களை போலீஸார் கண்ணில் மண்ணை தூவி விட்டு கடத்திச் செல்லும் நுட்பத்தை கண்டு மரக்கடத்தல் முதலாளி கொண்டரெட்டியின் அபிமானத்தைப் பெற்று விடுகிறார். அடுத்தடுத்து கடத்தல் செய்யும் வித்தை அல்லு அர்ஜுனுக்கு தெரிவதால் கூலிக்கு வேலை செய்யும் அவருக்கு பெரும் பொறுப்புகளையும் பணத்தையும் கொடுக்கிறார் கொண்டாரெட்டி. இதனால் தொழிலில் உருவான எதிரிகளை வீழ்த்தி, கூடவே குடும்பத்தில் நிகழ்ந்த சிலபல பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை. மேலும் அடுத்த பாகமும் வரவிருப்பதால், பகத் பாசில் கேரக்டருக்கும், அவருக்குமான போட்டியோடு இந்த முதல் பாகத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் சுகுமார்.
படத்தில் புஷ்பாவாக வாழ்ந்திருக்கிறார் அல்லு அர்ஜுன். தரை லோக்கலாக நடித்து தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். குறிப்பாக உடல்மொழி, முற்றிலும் புதிய அவதாரம். படத்தில் எங்குமே அல்லு அர்ஜுன் தென்படவில்லை. புஷ்பராஜ் என்கிற அந்த கதாபாத்திரம்தான் தெரிகிறது. (அவர் பேசும் சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் உறுத்தல். நார்மல் தமிழிலே வசனங்களை அமைத்திருக்கலாம். )நாயகியாக ராஷ்மிகா கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்
மிரோஸ்லா கூபாவின் கேம்ரா அபாரம்.. ஒரு கேங்க்ஸ்டர் படத்துக்கு தேவையான கச்சிதமான ஒளிப்பதிவை செய்து ஸ்கோர் செய்திருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும். அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் ருத்ரதாண்டவமே நிகழ்த்தி புஷ்பா நிமிரச் செய்திருக்கிறார்.. பாடல்களும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஏற்கெனவே இணையத்தில் ஹிட்டடித்த ‘ஊ சொல்றியா’ பாடலுக்கும், ‘சாமி சாமி’ பாடலுக்கு அரங்கம் அதிர்கிறது.
இப்படி ஏகப்பட்ட பாசிட்டிவ் இருந்தாலும் படத்தின் நீளம் நம்மை ஒரு கட்டத்தில் பொறுமை இழக்க வைத்துவிடுகிறது. 3 மணி நேரப் படம் என்பது இந்த காலத்திற்கு அயர்ச்சியை தரக் கூடியதாக இருக்கிறது. அல்லு அர்ஜுன் எதிரிகளை எல்லாம் லெப்ட் கையிலே கேண்டில் பண்ணி மாஸ் காட்டுவதெல்லாம் ரசிக்கும்படிதான் இருக்கிறது. அதிலும் வாகனத்தில் ரிலாக்ஸாக வர ஆசைப்பட்டு இரண்டு பேரை கொன்று வீசி விடுகிறார். இப்படி அவர் செய்வதும் சட்ட விரோதச் செயல்கள்தானே..? பின் எப்படி அவரின் சாமர்த்தியங்களை எல்லாம் நாம் மெச்ச முடியும்?
ஆனாலும் இந்த ‘புஷ்பா’ சினிமா ரசிகர்கள் குடுப்பத்தோடு தியேட்டரில் கொண்டாடத்துடன் பார்க்க வேண்டிய படம்.
மார்க் 3.25 / 5