நேஷனல் ஹைவேஸில் ஒயின்ஷாப்புகளுக்கு அனுமதி! – பஞ்சாப் அசெம்பளி அதிரடி!
மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே அமைந்திருக்கும் உணவு விடுதிகள், கிளப்பு களில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் பஞ்சாப் சட்டப்பேரவை யில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுபான கடைகளை அகற்றும்படி கடந்த ஆண்டு டிசம்பரில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மதுக்கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் இருந்து உணவு விடுதிகள், கிளப்புகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத் திருத்தம் அம்மாநில சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
எனினும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலையையொட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் மதுபான கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே மதுபான கடைகள் திறக்க வேண்டும் என்றும் அனுமதி பெறப்பட்ட கடைகள் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.