மது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி ; புதுச்சேரி அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரலில் மட்டும் புதுச்சேரி அரசுக்கு ரூ.325 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வருமானத்தை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் புதுச்சேரி அரசு, முதற்கட்டமாக மதுபானங்களுக்கு கொரோனா வரியை விதித்தது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதும் கொரோனா வரியை விதித்துள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசல் மீது 3.65 சதவீதமும் விதித்துள்ளது. இதன்மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.65 முதல் ரூ.1.80, டீசல் விலை லிட்டருக்கு .2.60 முதல் ரூ.2.90 வரை உயரும் எனத் தெரிகிறது.
புதுச்சேரியில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி வழங்க முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு கொஞ்சமும் நிதி ஒதுக்கவில்லை. அதனால் சுகாதாரத் துறைக்காக எனக் குறிப்பிட்டு புதுச்சேரியில் கரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி உயர்த்தப் பட்டது. அதன்படி, பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும் டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அமலுக்கு வந்திருந்தது. இந்நிலைஉஇல் மீண்டும் பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி அரசு நாளை (மே 29) முதல் உயர்த்துகிறது.
புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் மீதான வரி 28 சதவீதமாகிறது. அதன்படி, தற்போது 5.85 சதவீதம் அதிகரிக்கிறது. டீசல் 21.8 சதவீதமாகிறது. அதன்படி 3.65 சதவீத வரி உயர்கிறது.
மாஹேயில் பெட்ரோல் வரி 23.9 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 1.75 ஆகும். டீசல் மீதான வரி உயர்வில்லை.
ஏனாமில் பெட்ரோல் மீதான வரி 25.7 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 3.55 ஆகும். டீசல் வரி 20 சதவீதமாகிறது. அதன் உயர்வு 1.85% ஆகும்.
இவ்வரி உயர்வு 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.