போட்டியே இல்லாத இடத்தில் ஜெயித்து என்ன செய்யப் போகிறாய்?

போட்டியே இல்லாத இடத்தில் ஜெயித்து என்ன செய்யப் போகிறாய்?

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் ஒரே வீட்டிற்குள் நீண்டநாட்கள் சிலரை அடைத்து வைத்தால் அவர் களுக்குள் காதல் அரும்பியே தீரும். பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை – பெரும் சுற்றுவெளி இல்லாத இடத்தில் இயல்பாக மனிதர்கட்கு உள்ளிருக்கும் பிரியத்தை வெளிப்படுத்த அருகில் இருப்பவர்களைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. சிறிய அளவிலான ஈர்ப்பே மிகப்பெரிய பிடித்தமாக மனதை நம்பவைத்து விடும். அது காதலாகப் பரிணமிக்கும், அக்காதலில் எந்த போலித்தனமும் கிடையாது. என்ன ஒன்று அவர்களுக்கு வீட்டிலிருந்து விடுதலை கிடைத்து வெளிவந்ததும், அன்பு தருவதற்கும் செலுத்துவதற்கும் மனிதர்கள் கூடியதும் இந்தக்காதல் தானாக உருவழிந்து போகும். அங்கு ஏமாற்றிவிட்டோமோ ஏமாற்றப்பட்டோமோ என்றெல்லலாம் கேள்விகளுக்கு இடந்தராமல் இணைந்திருந்த காலங்களுக்கு நன்றி சொல்லி நகர்வதே அழகு. இந்த புரிதலை அடையாதோர் முகத்தை திருப்பிக்கொண்டு செல்வர்.போலவே கோபமும் வன்மமும் இதே அடிப்படையில்தான் இயங்கும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் ஆதார அம்சமே இதுதான். ஒரு பெண்ணைப் பிடித்து அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஆணுக்குத் திருமணம் செய்துவைத்து ”எல்லாம் போகப் போக சரியாகப் போய்விடும்” என்று பெற்றோர் சொல்வது இந்த நியதியினால்தான். அவளை வெளியே விடாது வீட்டிற்குள்ளேயே வைத்து அவளின் புற உலகங்களின் தொடர்பை துண்டித்து மிகக் குறுகிய சுற்றுவட்டத்திற்குள் அவளை நிறுத்தினால், அவளுக்குள் இயல்பாகவே தோன்றும் அன்பை தனக்கு பிடிக்கவே பிடிக்காத அந்த ஆணிடம் தான் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவாள். தெரிவிப்பாள். அவர்கள் தங்களை ஆதர்ஷ தம்பதிகள் என்று சொல்லிக்கொள்வர். என்றேனும் அவளுடைய வெளியை அவளிடம் ஒப்படைக்கும் போது அவளுக்கு புதுக்காதல் வரும், வந்தே தீரும். அதனை வெளிச்சொல்ல கடந்து விட்ட காலங்களும் சிக்கிக்கொண்ட குடும்ப அமைப்புமே அவளைத் தடுக்கும்.

பெண்ணை வேலைக்கு விடக்கூடாது என்ன படித்தாலும் வீட்டிற்குள்ளேயே இரு என்று அவளைப் பணித்ததின் காரணம் இதுதான். வெளியே சென்றால் அவளுக்கு இன்னொரு காதல் வந்துவிடும் வாய்ப்புகள் இருக்கிறது என்று பயப்படும்போதே அவளுக்கு சரியான காதலை அன்பை வழங்க வில்லை என்று ஆண் புரிந்துகொள்கிறான். அதை அப்படியே அப்பட்டமாக ஒத்துக் கொள்வது எப்படி முடியும்? அதனால் வேறு ஒரு வழியாக உடல் சார்ந்த பாதுகாப்புகளை முன்வைத்து ஆண்களின் அயோக்கிய அம்சங்களைச் சொல்லி உன்னால் புற உலகில் சமாளிக்க முடியாது போகவேண்டாம் என்று தடுப்பான். ”நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று மீறும் பெண் தன்னை மீடடெடுக்கிறாள். முடியாத பெண் உதாரணமனைவியாக வாழ்ந்து மடிந்து போகிறாள்.

அப்படியெனில் தன்னுடைய புற உலகை மீடடெடுத்த பெண்ணுக்கு இன்னொரு காதல் வருமா? என்றால் வரட்டுமே இப்போது என்ன? போட்டியே இல்லாத இடத்தில் ஜெயித்து என்ன செய்யப் போகிறாய்? எப்போதும் அவள் காணும் ஒரே ஆண் நீதான், எப்படியும் அவள் உன்னையே நாடித் தான் ஆகவேண்டும் எனும்போது நீ ஏன் அவளுக்கு எல்லையற்ற அன்பினைத் தரப்போகிறாய்? பெண்ணின் மனதை அத்தனை ஆண்கள் தாண்டியும் கவர்வது தானே ஆணின் செருக்கு.! அன்பின் முக்கியத்துவங்களை அலடசியமின்றி குன்றாது வழங்குவதற்கு அப்போதுதானே துணிவாய்!. அப்படியெல்லாம் முடியாதென்றால் நீ அவளைக் காதலிக்கவில்லை, நீ செலுத்துவது அன்பல்ல அக்கறையுமல்ல, அவளை பொருள் போல உடைமை செய்ய நினைக்கிறாய்.

வானளாவிய காதலை இருவரும் ஒருசேர உணர்வதற்காகவேணும் பெண்ணின் மீட்சி ரொம்பவே அவசியப்படுகிறது.

கார்த்தி

error: Content is protected !!