உ.பி. தலித் பெண் கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை ஏன்? – பிரியங்கா காந்தி டவிட்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாதராஸ் மாவட்ட ஆட்சியரை தற்காலிக பதவி நீக்கம் செய்யும்படி உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வயல்வெளியில் புல்அறுக்கச் சென்ற பொழுது உயர்ஜாதி குண்டர்கள் நான்கு பேரால் கற்பழிக்கப்பட்ட தலித் இளம்பெண் செப்டம்பர் 21ஆம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் காலமானார்.அந்தப் பெண்ணின் உடலை அவரது சொந்த கிராமமான பூலா கார்கிக்கு கொண்டு சென்ற உத்தரப்பிரதேச போலீசார் நேரில் சுடுகாட்டுக்குச் சென்று உடலை எரித்துவிட்டார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோரை இறுதிச்சடங்குகள் செய்யக் கூட அனுமதிக்கவில்லை.
அன்று தலித் பெண்ணின் அப்பா, அம்மாவை சந்திக்க வெளியிடங்களில் இருந்து வந்தவர்களை அனுமதிக்கவில்லை. டெல்லியிலிருந்து அந்த தலித் பெண்ணின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக புறப்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவும் கிரேட்டர் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் அவர்கள் மீண்டும் உயில் உள்ள அந்த தலித் பெண்ணின் பெற்றோரை சந்தித்து பேசுவதற்காக புறப்பட்டு வந்தனர் இந்த முறை உத்தரபிரதேச போலீசார் தடை செய்யாமல் அனுமதித்தனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா, காங்கிரஸ் எம்பிக்கள் தலித் பெண்ணின் தாய் தந்தையர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து சனிக்கிழமை மாலை பேசினார்கள்.
இதை அடுத்து பிரியங்கா காந்தி இன்று ஹிந்தியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இறந்த பெண்ணின் குடும்பத்தாரை மாவட்ட ஆட்சியர் கடுமையாக மிரட்டி உள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக இப்படி தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரை உடனடியாக பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும். அவரது செயல் முறைகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சிபிஐ விசாரணை ஏன்?
உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்தார் நீதி விசாரணை வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக உத்தரப்பிரதேச அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை.
உத்தரப்பிரதேச அரசு தனது தூக்கத்திலிருந்து கண் விழித்து இருப்பது உண்மையானால், அந்த தலித் பெண்ணின் குடும்பத்தினர் கூறுவதை ஏற்று செயல்பட வேண்டும் என்று பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.