உ.பி. வன்முறை: விவசாயிகளுக்கு ஆறுதல் படுத்த கிளம்பிய பிரியங்கா காந்திக்கு தடுப்புக் காவல்!

உ.பி. வன்முறை: விவசாயிகளுக்கு ஆறுதல் படுத்த கிளம்பிய பிரியங்கா காந்திக்கு தடுப்புக் காவல்!

உ. பி. மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். முன்னதாக லக்கிம்பூர் சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், “இந்தச் சம்பவம் அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க அரசியலைக் கையில் எடுத்துள்ளதையே காட்டுகிறது. இது விவசாயிகளின் பூமி. பாஜகவின் பூமி அல்ல. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாரைச் சென்று நேரில் சந்திப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால் நான் ஏதோ குற்றம் செய்வதுபோல் என்னைத் தடுத்து நிறுத்துகின்றனர். என்னைக் கைது செய்ய வாரன்ட் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினார். ஆனால், லக்கிம்பூரில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறிய போலீஸார் பிரியங்காவை சீதாபூர் பகுதியில் ஒரு விடுதியில் தடுப்புக் காவலில் வைத்துள்ள நிலையில் அவர் உண்ணாவிரதம் மேற் கொண்டுவருகிறார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லட்சுமிபூர் கேரி என்ற பகுதியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அதேபகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக அம்மாநில துணை முதல்வர் கேசவ் மற்றும் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கலந்துக்கொள்ள சென்றனர். அதே சமயம் மத்திய இணை அமைச்சரின் வருகையைக் கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர், இணை அமைச்சருடன் வந்த வாகனம் ஒன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்தது.இதில் போராடிய விவசாயிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகின. மேலும் பலர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், தீவிர பிரிவில் சேர்க்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். அதேவேளையில் துணை முதல்வர், ஒன்றிய அமைச்சர் உள்ளிட்டோரை மீட்டுச் சென்ற காவல்துறை, விசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கூட்டத்தைக் கலைத்தது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் கார் மோதி தற்போதுவரை 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான் காரை இயக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கு கூடுதல் டி.ஜி.பி., பிரசாந்த் குமாரை அனுப்பி உள்ளார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது நாளாக அம்மாநிலம் முழுவதும் விவாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://twitter.com/aanthaireporter/status/1444871561329008645

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நள்ளிரவே லக்கிம்பூர் கேரி நோக்கி காரில் புறப்பட்டுச் சென்றார். வழியில் காவல்துறையினர் தடுக்க முயற்சித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த நாடு விவசாயிகளுக்கு சொந்தமானது என்றும் ஆளுங்கட்சிக்கு சொந்தமானது அல்ல எனவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts

error: Content is protected !!