ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சபரிமலை தரிசனம் செய்யும் திட்டம் கேன்சல்!
பாரம்பரியம் மிக்க சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (ஜன.,6) ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார் என்று ஒரு தகவல் வெளியான சில மணி நேரங்களில் குறுகிய காலத்தில் ஜனாதிபதி வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொள்வது சிரமம் எனக் கேரள அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் வந்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு பூஜைக்காக சன்னதி நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதனையொட்டி கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஜன.,15 ல் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடை பெறுகிறது. அப்போது சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். இதற்காக பலமணி நேரங்கள் கழித்து தான் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந் நிலையில் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜன.,6 ல் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து சபரிமலை கோவிலின் தேவசம்போர்டுக்கு ஜனாதிபதி மாளிகை சார்பில் கடிதம் வந்துள்ளது. இதன்படி ஜன.,5 ல் தனி விமானம் மூலம் கொச்சி வரும் ஜனாதிபதி, அன்று விருந்தினர் மாளிகையில் தங்குவார் என்றும், மறுநாள் (ஜன.,6) காலையில் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளார் எனவும் கூறப்படுகிறது. சபரிமலையில் ஜனாதிபதி வருகையொட்டி கோவிலில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.அதே சமயம் , குறுகிய காலத்தில் ஜனாதிபதி வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது சிரமம் எனக் கேரள அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கேரள அரசுக்கு ஜனாதிபதி மாளிகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளாது.
இதுகுறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘’ குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு அரசுக்குக் கிடைத்திருக்கிறது. அவரது பயணம் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை’’ என்றார்.
முன்னதாக 1973 ல் அப்போதைய ஜனாதிபதி வி.வி கிரி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். அடுத்து 2 வதாக சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.