சர்வதேச மகளிர் தினம் : 29 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது!

சர்வதேச மகளிர் தினம் : 29 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது!

ன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அனைத்து அரசியல் தலைவர்களும் பெண்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (மார்ச் 8) மகளிர் தினத்தையொட்டி, 2020-2021ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருதுகளைப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 29 பெண்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

நாரி சக்தி புரஸ்கார் விருது ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்துறை, விவசாயம், கண்டுபிடிப்பு, சமூகப்பணி, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அசாதாரண பங்களிப்பை அளித்த பெண்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டு, சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, பழங்குடியின செயற்பாட்டாளர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, கண்டுபிடிப்பாளர் நசிரா அக்தர், இன்டெல்-இந்தியா நிறுவன தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய், கதக் நடனக் கலைஞர் சைலி நந்த்கிஷோர் அகவனே, கணிதவியலாளர் நீனா குப்தா உள்ளிட்டோருக்கு இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாரி சக்தி புரஸ்கார் விருதுகளை வழங்கினார்.

இந்த விருது பெறுபவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடவுள்ளார். விருது பெறுபவர்களுக்கு விருது சான்றிதழுடன், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்.

Related Posts