குழந்தை பிறப்பதை விரும்பாத மனைவி கர்ப்பத்தை கலைத்து கொள்ளலாம்! – சுப்ரீம் கோர்ட்

கர்ப்ப காலத்தில் பல்வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. அதில், சட்டவிரோத கருக் கலைப்பால் ஏற்படும் மரணம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 68 லட்சம் பேர் கருக் கலைப்பு செய்து கொள்கின்றனர். பெரும்பாலான கருக் கலைப்புகள் மருத்துவர் உதவியுடன் பாதுகாப்பாக நடந்தாலும், சட்டவிரோத கருக் கலைப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. அப்படி சட்டவிரோதமாக செய்யப்படும் கருக் கலைப்பால் தினமும் 10 பெண்கள் மரணிக்கின்றனர். 80 சதவிகிதப் பெண்களுக்கு கருக் கலைப்பு சட்டபூர்வமானது குறித்து தெரியவில்லை. அதனால்தான், பெரும்பாலான பெண்கள் சட்டவிரோத கருக் கலைப்பு செய்து மரணத்தைச் சந்திக்கின்றனர் என்றெல்லாம் முன்னரே செய்திகாள் வெளியாகி இருந்த நிலையில் கர்ப்பத்தை தன் விருப்பப்படி கலைத்த மனைவியிடம் இழப்பீடு கேட்டு கணவன் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. குழந்தைபெறுவதா.. கர்ப்பத்தை கலைப்பதா என்று மனைவியின் தனிப்பட்ட உரிமை.. அதை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
பஞ்சாபைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1994ல் திருமணம் ஆனது. அவர்களுக்கு 1995ல் ஒரு மகன் பிறந்தான். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து பெற்றோர்களுடன் மனைவி வாழ்ந்தார். உடன் மகனும் இருந்தான். ஜீவனாம்சம் கோரி சண்டிகர் கோர்ட்டில் மனைவி தாக்கல்.செய்த மனுவை விசாரித்த நீதிபதி சமரசம் செய்து வைத்தார். அதன்பிறகு 2002 நவம்பரில் இருவரும் சேர்ந்து வாழத் துவங்கினர். 2003 ஜனவரியில் மனைவி கர்ப்பமானார். ஆனால் கணவருடன் சீரான உறவு தொடராத நிலையில் கரப்பம் தேவையா… என்று மனைவி சிந்தித்தார். கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தார். கணவர் எதிர்த்தார். பெற்றோர்களின் உதவியை நாடினார். அவர்கள் துணையுடன் மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை கலைத்து விட்டார்.தனது வாரிசை அழித்த மனைவியிடம் நஷ்டஈடு கோரி கணவர் வழக்கு தொடர்ந்தார். அந்த கருவுக்கு காரணமான தந்தை என்ற முறையில் என் சம்மதம் இல்லாமல் கருவை கலைக்க துணை போனதால் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள், சகோதரர் மற்றும் கர்ப்பம் கலைத்த டாக்டர்களும் சேர்ந்து ரூ.30 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று அவர் கோரினார்.
இதை விசாரித்த பஞ்சாப்–அரியானா ஐகோர்ட், கணவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தது மனைவியின் தனிப்பட்ட உரிமை. கணவருடன் இல்லறத்தில் மனைவி ஈடுபட்டதாலேயே குழந்தை பெற வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. குழந்தை பெறுவதும், வேண்டாம் என்று முடிவு செய்வதும் மனைவியின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. கரு தரிக்கவேண்டும்.. குழந்தை பெற வேண்டும் என்று மனைவியை கணவன் கட்டாயப்படுத்த முடியாது. மனைவி என்பவள் குழந்தை பெறும் இயந்திரம் அல்.ல. மூலப்பொருட்களை போட்டு ஒரு பொருளை உற்பத்தி செய்வது போல மனைவி ஒரு இயந்திரம் அல்ல.மனைவியின் மனநிலையை பாதிக்கும் என்பதால் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தது மனைவியின் உரிமை. அதில் கணவன் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் வழக்கு செலவாக மனைவிக்குரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்று கணவருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கணவன், மனைவி இடையே உறவுகள் சீராக இல்லாத நிலையில் வயிற்றில் வளரும் கருவை அழிக்க மனைவி முடிவு செய்தது சரியே. அது அவரது உரிமை. கருவை கலைத்ததால் ஒன்றும் இந்த தம்பதிகளிடம் உறவு கெட வில்லை. சட்டப்படி பார்த்தால், கருவை கலைப்பது பற்றி கணவரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. கணவரின் சம்மதத்தை பெற தேவையில்லை கருகலைப்பு சட்டமே கூறுகிறது. , பதினெட்டு வயதை தாண்டிய அந்தப் பெண், தற்போது கர்ப்பம் வேண்டாம் என்று முடிவு எடுக்கிறார். தனது கர்ப்பத்தை கலைக்கிற உரிமை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே இருக்கிறது. இதற்கு எப்படி பெற்றோர்களும் கருவை கலைத்த டாக்டர்களும் பொறுப்பு ஆக முடியும்… கணவன், மனைவி இடையே சுமுகமான உறவு இல்லாத நிலையில், குழந்தை பிறப்பதை விரும்பாத தால் கர்ப்பத்தை மனைவி கலைத்தது சரியே. -இவ்வாறு தீர்ப்பில் கூறி உள்ளனர்.