பிரணாப் முகர்ஜி – முன்னாள் குடியரசு தலைவர் ஆனார்!

பிரணாப் முகர்ஜி – முன்னாள் குடியரசு தலைவர் ஆனார்!

புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க் கிழமை நாளை பதவி ஏற்கவுள்ளார். எனவே குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறி பிரணாப் முகர்ஜி புதிய பங்களாவில் குடியேறுகிறார். அவர் தில்லி ராஜாஜி மார்க் பகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10ஆம் எண் கொண்ட அரசு பங்களாவில் குடியேறுகிறார். 11,776 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா தற்போது வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. பங்களாவின் முன்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி புத்தக பிரியர் என்பதால், அதிக இட வசதியுடன் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், இந்த பங்களாவில் குடியேறி வசித்து வந்தார். 2015ஆம் ஆண்டு மரணம் அடையும் வரை அவர் அங்குதான் தங்கியிருந்தார். பின்பு இந்த பங்களா மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி இங்கு குடிவருவதால் மகேஷ் சர்மா தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அக்பர் சாலை 10ஆம் எண் இல்லத்தில் குடியேறுகிறார்.

81 வயது பிரணாப் முகர்ஜிக்கு சிகரெட் பைப் பிடிக்கும் பழக்கம் நீண்டகாலமாக இருந்துவந்தது. உடல் நலம் கருதி மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டதால் இப்போது நிறுத்திவிட்டார். என்றாலும், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த 500க்கும் மேற்பட்ட சிகரெட் பைப்புகளை சேகரித்து வைத்திருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவதால் அவற்றை அங்குள்ள அருங்காட்சியகத்தில் அவர் ஒப்படைத்தார்.

இதனிடையே நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து இன்றுடன் விடைபெறும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் முதல் குடிமகன் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி இன்று இரவு 7.30 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காக கடமையாற்றியுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். நாட்டிற்காகக் கொடுத்ததை விட நான் பெற்றுக்கொண்டதே அதிகம். சிறப்பாகப் பணியாற்றியதை நான் சொல்வதை விட காலம் சொல்வதுதான் சரியாக இருக்கும். அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும். எனது பதவிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டுக்காகவே கடமையாற்றியுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக் கொண்டேன்.

நாடாளுமன்றம் எனது கோவில். மக்களுக்கு சேவை செய்வதுதான் எனது விருப்பம். கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றின் பெருக்கம்தான் இந்தியாவின் சிறப்பு. சகிப்புத்தன்மையில் இருந்து நமது பலத்தை பெறுகிறோம். இது நூற்றாண்டுகளாக நமது கூட்டு உணர்வின் ஒரு பகுதியாகும். கல்வியின் உருமாற்ற சக்தியின் மூலம் சமூகத்தை மறுசீரமைப்பது சாத்தியமாகும். எனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நாங்கள் ஒரு மனிதாபிமான மற்றும் மகிழ்ச்சியான நகரத்தை உருவாக்க முயற்சித்தோம். ஏழை மக்களின் வளா்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இறுதியாக புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Posts

error: Content is protected !!