பாமகவின் பித்தலாட்ட அரசியல்: தைலாபுரத்தின் மலிவான நாடகம் எடுபடவில்லை!
தமிழக அரசியல் களத்தில் சமீப காலமாக அரங்கேறி வரும் ஒரு நாடகம், தமிழக வாக்காளர்களின் பொறுமையைச் சோதித்து வருகிறது. ஆம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அரங்கேற்றி வரும் ‘போங்காட்டம்’ அல்லது ‘நாடகம்’ இனி எடுபடாது என்பதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
ராமதாஸ் பாமகவை வன்னியர் சங்கம் என்ற பெயரில் தொடங்கியபோது, இது ஒரு சமூக நீதிக்கான இயக்கம் என்றும், ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றும், தன் மகனோ, மகளோ, உற்றார் உறவினரோ ஒருபோதும் தன் வாரிசாக மாட்டார்கள் என்றும் பல சபதங்களைச் செய்ததை காலம் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. ஆனால், காலப்போக்கில் அந்தச் சபதங்கள் அனைத்தும் காற்றோடு பறக்கவிடப்பட்டு, பாமக ஒரு குடும்பக் கட்சியாக உருமாறியது கண்கூடாகத் தெரிந்தது.

வன்னியர் சமுதாயத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்காகவே கட்சி என்று முழங்கிய ராமதாஸ், அந்த வன்னியர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு பள்ளிக்கூடம் கூட நடத்தவில்லை. அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஒரு வங்கி அல்லது அறக்கட்டளை கூட உருவாக்கவில்லை. தொழிற்பயிற்சி பெற ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் கூட நடத்தவில்லை. மாறாக, தனக்காக, தன் மகனுக்காக, தன் குடும்பத்திற்காக மட்டுமே அவர் கட்சி நடத்துகிறார் என்ற விமர்சனங்கள் வலுத்தன. பாமகவின் அனைத்து முடிவுகளும், அரசியல் நகர்வுகளும், ராமதாஸ் குடும்பத்தின் நலனை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இப்போது, அவர் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு நிலைமை. மகன் அன்புமணி, தந்தையின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படத் துணிந்து, தமிழக அரசிடம் ராமதாஸ் சரணடையும் ஒரு சூழல் உருவாகியுள்ளது. ஆனாலும், இப்படி தனக்கான பதவிக்காக எதிர்க்கத் துணிந்துவிட்ட அன்புமணியை கட்சியை விட்டு நீக்க ராமதாஸுக்குத் துணிவில்லை. ஏன்? உண்மையில், பாமக என்பது முழுக்க முழுக்க ராமதாஸ் ஆதரவாளர்களைக் கொண்டது. ஆனால், 86 வயதான ராமதாஸுக்குப் பிறகு அன்புமணிதான் என்ற ஒரு கணக்குப்போட்டு, ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டும் டாஸ்மாக் துணையுடன் அன்புமணியின் பின்னால் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்தச் சூழலில், அன்புமணியை நீக்குவது என்பது ராமதாஸுக்கு எஞ்சியிருக்கும் சிறிதளவு மரியாதையாவது மீட்டுத்தரும் .
அப்படி இருக்கையில், மகன் அன்புமணி மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க திராணியில்லாமல், ஸ்டாலின் அரசிடம் ‘அய்யா… எங்க ஐயா மானத்தைக் காப்பாத்துங்க’ என்று மனு கொடுப்பதும், அதையும் ஸ்டாலின் அரசு வாங்கி, குழப்பமான வார்த்தைகளுடன் ‘தடை’ என்று சொல்லி சீல் போட்ட கடிதம் எல்லாம் கொடுத்துவிட்டு, அன்புமணி நடைபயணத்திற்கும் பாதுகாப்பு கொடுப்பதும் மக்களை, வாக்காளர்களைக் கேணயர்களாக நடத்தும் போக்கு. இது ஒரு வெளிப்படையான அரசியல் நாடகம் என்பதில் சந்தேகமில்லை.
போதும்! இந்த நாடகத்தைப் பார்க்க தமிழக மக்களுக்கு நேரமில்லை என்பதை தைலாபுரத்தாருக்கு உரத்தக் குரலில் சொல்ல வேண்டிய சூழல் வந்துவிட்டது. தமிழக மக்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த அரசியல் ‘போங்காட்டம்’ இனி ஒருபோதும் எடுபடாது என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும்.
நிலவளம் ரெங்கராஜன்


