ஓ.பன்னீர் உத்தமர் வேஷம் போடுகிறார்!- ராமதாஸ் கண்டனம்

ஓ.பன்னீர் உத்தமர் வேஷம் போடுகிறார்!- ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார். ஆனால், அதன்பின்னர் 24 மணி நேரமாகியும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாதது ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க முடியுமா என்பதே ஐயமாக உள்ளது.

ops feb  9a

“உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், தேசநலன் சார்ந்த மிக முக்கியமான விசாரணைகளுக்காக அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் தலைவர்களாக மட்டுமே பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவர்; சாதாரண நீதி விசாரணைகளுக்கு பணியிலுள்ள நீதிபதிகளை அனுப்ப முடியாது’’ என்று 12.07.2002 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பால் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இத்தகைய சூழலில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அதை மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றுவதுதான் சாத்தியமான தீர்வாக அமையும் என்பது எனது கருத்தாகும்.

\உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிடம் நலம் விசாரிக்க வந்த மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. அவர்களை பன்னீர் செல்வமும், மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரையும் தான் சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எந்த அடிப்படையில் இந்த தகவல்களை அவர்கள் இருவரும் தெரிவித்தார்கள். யாரோ கூறியதை அல்லது கூறும்படி சொன்னதைத்தான் தலைவர்களிடம் பன்னீர்செல்வம் கூறினார் என்றால் அதற்கான கட்டாயம் என்ன? ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே விசுவாசமானவராக இருந்திருந்தால் அந்த உண்மையை அப்போதே பன்னீர்செல்வம் கூறாதது ஏன்?

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு கடந்த அக்டோபர் 1, அக்டோபர் 22, டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போதெல்லாம் அவரை வரவேற்று அழைத்துச் சென்றது பன்னீர்செல்வம்தான். அக்டோபர் 22-ம் தேதி ஆளுநர் மருத்துவமனைக்கு வந்த போது, அவர் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், அவரைப் பார்த்து ஜெயலலிதா கையசைத்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தபோது, அவரை வரவேற்று அழைத்து வந்த பன்னீர்செல்வம் உடன் செல்லவில்லையா? அல்லது ஆளுநருடன் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டாரா? அவ்வாறு தடுக்கப்பட்டால் அது குறித்து அப்போதே மக்களுக்கு தெரிவிக்காதது ஏன்?

பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பா? ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த அனைத்திலும் சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்துவிட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம் போட பன்னீர் செல்வம் முயல்கிறார். ஆனால், அவரது நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். இதுகுறித்து நிச்சயம் ஒருநாள் விசாரணை நடத்தப்படும். அப்போது அனைத்து உண்மைகளும் வெளிவருவது உறுதி| என்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!